தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதியாகி வருகின்றனர். அடுத்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், கொசுக்களின் உற்பத்தியும், டெங்கு பாதிப்பும் மேலும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆண்கள், பெண்களுக்கு தலா 10 படுக்கைகளுடன் தனி வார்டுகள் அமைக்கப்பட்டன. அதேபோல, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 14 படுக்கைகள், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஆண்களுக்கு 10 படுக்கைகள், பெண்களுக்கு 7 படுக்கைகளுடன் டெங்கு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 8 பேர் சிகிச்சையில் உள்ளனர். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இங்கும் டெங்குவுக்கு தனி வார்டு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.