புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 இடங்களில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
243 தொகுதிகளைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் நவம்பர் 23-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு, சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த 6ம் தேதி வெளியிட்டது. அதன்படி வரும் நவம்பர் 6 மற்றும் 11-ம் தேதிகளில் இருகட்டங்களாக பிஹார் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள், நவ. 14-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 18-ம் தேதியும். 2-ம் கட்ட தேர்தலுக்கான மனு தாக்கல் வரும் 21-ம் தேதியும் தொடங்குகிறது. முதல் கட்டத் தேர்தலின்போது 121 தொகுதிகளுக்கும். 2-ம் கட்டத் தேர்தலின்போது 122 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தேர்தலை முன்னிட்டு, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும், எதிர்க்கட்சிகளின் மகாகட்பந்தனிலும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவடைந்து இன்று அறிவிப்பு வெளியானது. பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், வரவிருக்கும் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, தேசிய ஜனநாயகக் கூட்டணி குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும், ஒரு நல்ல சூழ்நிலையில், பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் இடப் பங்கீட்டை முடித்துள்ளனர். அதன்படி, பாஜக 101 இடங்களில் போட்டியிடும். ஐக்கிய ஜனதா தளம் 101 இடங்களில் போட்டியிடும். லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 29 இடங்களிலும், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா மற்றும் இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா ஆகியவை தலா 6 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் இந்த முடிவை உற்சாகமாக வரவேற்றுள்ளனர். பிஹாரில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க அனைத்து கூட்டணிக் கட்சிகளும் தயாராகி உறுதியாக உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.