சிறந்த சின்னத்திரைக் கலைஞர்களைக் கெளரவிக்கும் 2024-ம் ஆண்டுக்கான விகடன் சின்னத்திரை விருதுகள் விழா இன்று நடைபெற்று வருகிறது.
இதில் 2024-ம் ஆண்டின் `சிறந்த தொகுப்பாளர் விருது’ மா.பா.கா ஆனந்த்துக்கு வழங்கப்பட்டது. விருதை, தொகுப்பாளர் திவ்யதர்ஷினி (DD) வழங்க, மா.கா.பா ஆனந்த் பெற்றுக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து, இயக்குநர் மிஷ்கின் தனக்குப் பரிசளித்த கைக்கடிகாரத்தை மேடையிலேயே திவ்யதர்ஷினிக்குப் பரிசளித்தார் மா.கா.பா. ஆனந்த்.

விருது விழா மேடையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, கிரிக்கெட் வீரர் தோனி, நடிகரும் தவெக தலைவருமான விஜய் ஆகியோரிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் குறித்த ஜாலியான செஷன் திவ்யதர்ஷினியுடன் நடந்தது.
ஜெயலலிதா
எல்லாரும் ‘Iron lady’னு சொல்றோம். ரொம்ப கம்பீரமானவர் ஜெயலலிதா அம்மா. ஆனா அவர்கிட்ட இருக்கிற மென்மையான குணம் என்னனு கேள்வி கேட்பேன்.
கலைஞர்
மக்களுக்கு நிறைய திட்டங்கள் கொண்டு வந்திருக்கார் கலைஞர் அய்யா. அவர் கொண்டு வர நினைத்து, கொண்டு வர முடியாமல் போன திட்டம் என்ன என்று கேட்பேன்.

தோனி
அவருக்குப் பயங்கரமான முட்டி வலி. அப்படியிருந்தும் கடைசி ஐபிஎல் சீசனில் விளையாடினார். எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை என்று விமர்சனமெல்லாம் வந்தது. ஆனால் அவ்வளவு முட்டி வலியிலும் விளையாடிதினமும் மேட்சை முடிச்சிட்டு மருத்துவச் சிகிச்சைக்காகச் செல்வார். இவ்வளவு வலியிலும் உங்களால் எப்படிச் சிரிக்க முடிகிறது என்று கேள்வி கேட்பேன்.
விஜய்
‘ஜனநாயகன்’தான் கடைசி படம்னு சொல்லிட்டு, அரசியல் பாதையில் பயணிக்கவிருக்கிறார் விஜய் சார். அவரது ரசிகர்கள் கடைசிப் படம் ரிலீஸாகும்போது எப்படி கண்ணீர் விட்டு கதறப்போகிறார்கள் என்று தெரியவில்லை. அந்த ரசிகர்களுக்கு நீங்க என்ன சொல்லுவீங்கனு கேள்வி கேட்பேன்” என்று கூறியுள்ளார்.