பெங்களூரு,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. மத வழிபாட்டு தலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 11ம் தேதி சென்னையில் உள்ள தமிழக டிஜிபி அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த இ-மெயிலில் கர்நாடக முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த மிரட்டல் தொடர்பாக தமிழக போலீசார், உடனடியாக கர்நாடக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி வீடுகளில் போலீசார் , வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கர்நாடக போலீசார் மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தமிழகத்தை சேர்ந்த நபர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இ-மெயில் முகவரி அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்