ஷாங்காய்,
வெளிநாடுகளுக்கு சென்று மேல் படிப்பை படிக்கும் இந்திய மாணவர்களின் விருப்ப தேர்வாக உள்ள நாடுகளில் சீனாவும் ஒன்று. அந்நாட்டின் ஷாங்காய் நகரில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்தியின்படி, எம்.பி.பி.எஸ். படிப்புகளை தொடர்வதற்காக இந்திய மாணவர்கள் அதிக அளவில் சீனாவுக்கு செல்கின்றனர். இந்நிலையில், சீனாவில் இந்தியை படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது.
இதன்படி, பல்கலைக்கழக அளவில் சர்வதேச படிப்புகளுக்கான துறைகளில் இந்தியும் ஒன்றாக உள்ளது. இந்நிலையில், சீனாவில் உள்ள பள்ளிகளிலும் இந்தியை பாடப்பிரிவில் ஒன்றாக சேர்த்துள்ளனர்.
இதனை முன்னிட்டு, சீனாவுக்கான இந்திய தூதர் பிரதீப் குமார் ராவத், ஷாங்காய் நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரி பிரதீக் மாத்தூர் ஆகியோர், இந்தி பயிற்றுவிப்பாளரான பவ்யா மேத்தாவை ஷாங்காய் நகரில் இன்று கவுரவித்தனர்.
இதன்படி அவர் பிரிட்டானிகா சர்வதேச மேனிலைப்பள்ளியில் இந்தியை பயிற்றுவிப்பார். இதன்படி, சீனாவில் உள்ள பள்ளிகளில் முதன்முறையாக இந்தி பாடம் கற்பிக்கப்பட உள்ளது. இதனால், இரு நாடுகளின் வருங்கால தலைமுறையினர் இடையே ஆழ்ந்த கலாசார உறவுக்கான புதிய சாத்தியக்கூறுகளும் ஏற்படும். பவ்யா, இந்தியாவின் போர் வீரரான கீர்த்தி சக்ரா விருது பெற்ற பிரிகேடியர் ரவி தத் மேத்தாவின் மகள் ஆவார்.