பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, புகழ்பெற்ற இளம் நாட்டுப்புறப் பாடகி மைதிலி தாக்கூர் பாஜகவில் இணைந்தார்.
பிஹாரின் மதுபானி மாவட்டத்தில் பிறந்த மைதிலி தாக்கூர், தனது 14-வது வயதில் இருந்து பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். டெல்லியில் வசித்து வரும் மைதிலி தாக்கூர் இந்தி, பெங்காலி, மைதிலி, உருது, மராத்தி, போஜ்பூரி, பஞ்சாபி, தமிழ், ஆங்கிலம் மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். சமீபத்தில் பாஜக தேசிய பொதுச் செயலாளரும் பிஹார் பொறுப்பாளருளான வினோத் தாவ்டே, மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் ஆகியோரை இவர் சந்தித்ததையடுத்து, இவர் அக்கட்சியில் இணைய இருப்பதாகவும், தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் செய்திகள் வந்தன.
இதன் தொடர்ச்சியாக அளித்த பேட்டியில், தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது ஆர்வத்தை மைதிலி தாக்கூர் வெளிப்படுத்தி இருந்தார். கடந்த 7ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன். எங்கள் சொந்த ஊர் உள்ள பெனிபட்டி தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன். எனது கிராமப் பகுதியுடன் எனக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதால் அங்கு போட்டியிட விரும்புகிறேன். அங்கிருந்து தொடங்குவது எனக்கு கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பைத் தரும். மக்களைச் சந்திப்பது, அவர்களுடன் பேசுவது போன்றவற்றை நான் என் கிராமத்தில் இருந்து தொடங்கினால் எனக்கு இன்னும் சவுகரியமாக இருக்கும்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிஹார் மாநில பாஜக தலைவர் திலிப் குமார் ஜெய்ஸ்வால் முன்னிலையில் மைதிலி தாக்கூர் இன்று பாஜகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மைதிலி தாக்கூர், “பிரதமர் மற்றும் முதல்வர் நிதிஷ் குமாரால் ஈர்க்கப்பட்டேன். அவர்களிடம் இருந்து உத்வேகம் பெற்று அவர்களை ஆதரிக்க நான் அரசியலில் இணைந்துள்ளேன். ஒரு அரசியல் கட்சியை ஆதரிப்பது உங்களை ஒரு அரசியல்வாதியாக ஆக்கும் என நான் நம்பவில்லை.
சமூகத்துக்கு சேவை செய்யவும், அவர்களின் சித்தாந்தத்தை ஒவ்வொருவருக்கும் கொண்டு செல்லவுமே நான் அரசியலுக்கு வந்துள்ளேன். நான் மிதிலாவின் மகள். என் ஆன்மா மிதிலாவில் வாழ்கிறது. எனக்கான திட்டம் என்ன என்பதை கட்சி அறியும். கட்சி இடம் கட்டளைகள் அனைத்தையும் நான் பின்பற்றுவேன்” என தெரிவித்துள்ளார்.
பிஹார் மட்டுமல்லாது இந்தி பேசும் மாநிலங்களில் புகழ்பெற்றவரான மைதிலி தாக்கூர் பாஜகவில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் 40 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டுள்ள பிஹாரின் மிதிலாஞ்சல் பிராந்தியத்தில் மைதிலி தாக்கூர் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கூறப்படுகிறது.