அண்டனானரீவோ,
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மடகாஸ்கர். அந்நாட்டின் அதிபராக அண்ட்ரே ரஜோலினா செயல்பட்டு வருகிறார். இதனிடையே, ஊழல், வறுமை, மின் தடுப்பாடு, தண்ணீர் தட்டுப்பாடு உள்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கிய போராட்டம் அதிபர் ரஜோலினாவுக்கு எதிராகவும், அவரது அரசுக்கு எதிராகவும் திரும்பியது. மேலும், அந்நாட்டு ராணுவத்தின் கெப்செட் எனப்படும் முக்கிய படைப்பிரிவு அதிபரின் உத்தரவுகளை ஏற்க மறுத்து, அரசுக்கு எதிராக திரும்பியது.
இந்நிலையில், போராட்டம் தீவிரமடைந்த நிலையில் அதிபர் ரஜோலினா நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார். அவர் பிரான்ஸ் ராணுவ விமானத்தில் நாட்டை விட்டு தப்பிச்சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் தப்பியோடியதையடுத்து ராணுவத்தின் கெப்செட் படைப்பிரிவு நாட்டின் பல்வேறு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.
முன்னதாக பிரான்சின் காலனி ஆதிக்க நாடாக மடகாஸ்கர் இருந்து வந்தது. காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலையான பின்னும் மடகாஸ்கரில் தனது படைவீரர்களை பிரான்ஸ் நிலை நிறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது