விசாகப்பட்டினத்தில் ரூ.87,520 கோடி மதிப்பில் கூகுள் ஏஐ மையம்: பிரதமரிடம் விவரித்த சுந்தர் பிச்சை

புதுடெல்லி: விசாகப்பட்டினத்தில் 15 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் கூகுள் அமைக்க உள்ள செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மையம் குறித்து அதன் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கினார்.

அமெரிக்காவுக்கு வெளியே உலகின் மிகப் பெரிய செயற்கை நுண்ணறிவு மையத்தை (Google AI Hub) கூகுள் நிறுவனம் அமைக்க உள்ளது. இந்தியா வந்துள்ள கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து இந்த திட்டம் குறித்து விவரித்தார்.

பின்னர் இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “விசாகப்பட்டினத்தில் முதன்முதலாக அமைக்கப்படும் கூகுள் ஏஐ மையம் குறித்த எங்கள் திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடியுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது ஒரு மைல்கல் வளர்ச்சி.

இந்த மையம் ஜிகாவாட் அளவிலான கணினி திறன், ஒரு புதிய சர்வதேச நீர்மூழ்கி நுழைவு வாயில், பெரிய அளவிலான எரிசக்தி உள்கட்டமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. இதன்மூலம், இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் மற்றம் பயனர்களுக்கு எங்கள் தொழில்முறை முன்னணி தொழில்நுட்பத்தைக் கொண்டு செல்லும். செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகளை துரதப்படுத்துவோம். மேலும், நாடு முழுவதும் வளர்ச்சிக்கான உந்துதலை அளிப்போம்” என தெரிவித்துள்ளார்.

சுந்தர் பிச்சை உடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஆந்திரப் பிரதேசத்தின் துடிப்பான நகரமான விசாகப்பட்டினத்தில் கூகுள் செயற்கை நுண்ணறிவு மையத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி. ஜிகாவாட் அளவிலான தரவு மைய உள்கட்டமைப்பை உள்ளடக்கிய இந்த பன்முக முதலீடு, வளர்ச்சி அடைந்த பாரதம் எனும் எங்களின் தொலைநோக்குத் திட்டத்தோடு ஒத்துப்போகிறது.

தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்துவதில் இது ஒரு மிகப்பெரிய சக்தியாக இருக்கும். இது அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவை உறுதி செய்யும். நமது குடிமக்களுக்கு அதிநவீன கருவிகளை வழங்கும். நமது டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தும். மேலும், உலகளாவிய தொழில்நுட்ப தலைவர் என்ற இந்தியாவின் இடத்தைப் பாதுகாக்கும்” என தெரிவித்துள்ளார்.

கூகுள் ஏஐ மையம் அமைப்பதற்கானப் பணிகள் அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவடையும் என்றும், இது உலகளாவிய கூகுள் நெட்வொர்க்குடன் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கூகுள் கிளவுடின் தலைமை நிர்வாக அதிகாரி தாமஸ் குரியன், “கூகுள் இந்தியாவில் நீண்டகாலமாக உள்ளது. இங்கு இது எங்களுக்கு 21வது ஆண்டு. ஐந்து ஆண்டுகளில் எங்களுக்காக 14,000 பேர் வேலை செய்ய உள்ளார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் எங்கள் கிளவுட் தீர்வுகளை நாங்கள் தொடங்கினோம். புதுடெல்லி மற்றும் மும்பையில் எங்கள் சாதனங்களை நாங்கள் உற்பத்தி செய்கிறோம்.” எனத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.