வாஷிங்டன் டி.சி.,
ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்கு பதிலடியாக, 2 ஆண்டுகளாக காசா மீது இஸ்ரேல் தொடுத்த போரில் 67 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்ட முயற்சியின் பலனாக, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமலானது.
இந்நிலையில், டிரம்பை புகழும் வகையில் டைம் செய்தி நிறுவனம், அட்டையில் அவருடைய புகைப்படத்துடன் கூடிய கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அதில், காசாவில் பிடித்து வைக்கப்பட்ட பணய கைதிகள், டிரம்பின் முதல்கட்ட அமைதி திட்டத்தின் கீழ் விடுதலையானார்கள். அப்போது பாலஸ்தீனிய கைதி ஒருவரும் விடுவிக்கப்பட்டார். டிரம்பின் 2-வது பதவி காலத்தில் மிக பெரிய சாதனையை அவர் படைத்திருக்கிறார்.
இதன்படி, மத்திய கிழக்கு பகுதியில், ஒரு மூலோபாய திருப்புமுனையாக காசா போர்நிறுத்த ஒப்பந்தம் அமையும் என அவருடைய பெருமையை குறிப்பிட்டு உள்ளது. அதற்கு டிரம்பின் வெற்றி என தலைப்பும் இட்டுள்ளது. காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி, 2 ஆயிரம் பாலஸ்தீனிய கைதிகள் மற்றும் 360 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டனர். 20 இஸ்ரேலிய பணய கைதிகளும் விடுதலையானார்கள்.
இதனை குறிப்பிட்ட டிரம்ப், என்னை பற்றி டைம் இதழ் நல்ல முறையில் கட்டுரையை வெளியிட்டு உள்ளது. ஆனால், அவர்கள் வெளியிட்ட புகைப்படம், எல்லா காலத்திலும் படுமோசமான ஒன்று. என்னுடைய முடியை அவர்கள் மறைத்து விட்டனர். காற்றில் பறப்பது போன்று சில முடிகள் காணப்படுகின்றன. அது, ஏதோ சிறிய பறக்கும் கிரீடம் போல் உள்ளது.
கீழே இருந்து ஒரு கோணத்தில் எடுக்கும் புகைப்படங்களை நான் ஒருபோதும் விரும்புவதில்லை. இந்த புகைப்படம் படுமோசம். அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஏன் இப்படி? என்று ஆவேசத்துடன் பதிவிட்டு உள்ளார்.
எனினும் டைம் செய்தி நிறுவனத்தின் இந்த பதிவுக்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் தெரிவித்து உள்ளனர். 6 ஆயிரத்து 800-க்கும் கூடுதலானோர் விமர்சனங்களையும் பதிவிட்டு உள்ளனர்.