மதுரை: சொத்து வரி முறைகேடு புகார் எதிரொலியால், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, திமுக தலைமை அறிவுறுத்தல்படி இன்று (அக்.15) தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய மேயரை தேர்வு செய்யும் மாமன்ற அவசர கூட்டம் துணை மேயர் நாகராஜன் தலைமையில் வரும் 17-ம் தேதி அவசரமாக நடக்கிறது.
மதுரை மாநகராட்சியில் தனிப்பெரும் கட்சியாக 67 வார்டுகளை கைப்பற்றிய திமுக சார்பில் 8-வது மேயராக இந்திராணி கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி பொறுப்பேற்றார். இவரது கணவர் பொன் வசந்த், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் தீவிர ஆதரவாளர். அந்த விசுவாசத்துக்குப் பரிசாக பழனிவேல் தியாகராஜன், 57-வது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்ற பொன் வசந்த் மனைவி இந்திராணியை மேயராக்கினார்.
முதல் 2 ஆண்டுகள் வரை இந்திராணி, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கண் அசைவில் நிர்வாகத்தை நடத்தினார். அதன் பிறகு இந்திராணி கணவர் பொன் வசந்த், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு தெரியாமல் மாநகராட்சியில் பல்வேறு காரியங்களில் ஈடுபடத் தொடங்கினார். நிழல் மேயராக அதிகாரிகளையும் இயக்கத் தொடங்கினார். பொன் வசந்தின் நிர்வாக தலையீடுகளால் தாக்குப் பிடிக்க முடியாமல் ஆணையாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதிகாரிகளை ஒருமையில் பேசுவது, டெண்டர், சொத்து வரி நிர்ணயம் செய்வதில் பொன் வசந்த் உத்தரவுகளை அவரது மனைவியும் மேயருமான இந்திராணி செயல்படுத்தினார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பொன் வசந்த்தை எச்சரித்தும் தொடர்ந்து அவர் தனது செயல்பாட்டை திருத்துக் கொள்ளாததால் ஒரு கட்டத்தில் அமைச்சர் தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மேயர் இந்திராணி வருவதற்கு ‘வாய்மொழி’ தடை விதித்தார்.
இந்நிலையில், சொத்து வரி முறைகேடு விவகாரம் விஸ்வரூபம் எடுக்க, 24 பேர் கைதாகினர். விசாரணைக்கு அழைக்கப்பட்ட மண்டலத் தலைவர்கள் 5 பேர், 2 நிலைக் குழு தலைவர்கள் ஆகியோரையும் முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய உத்தரவிட்டார். போலீஸார் விசாரணையில், சொத்து வரி முறைகேட்டில் மேயர் இந்திராணி கணவர் பொன் வசந்த்தும் உடந்தையாக இருப்பது தெரியவந்ததால் அவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆனால், அவரது மனைவி இந்திராணி தொடர்ந்து மேயராக தொடர்ந்தார். அதனால், மண்டலத் தலைவர்களுக்கு ஒரு நியாயம், மேயருக்கு மற்றொரு நியாயமா என கட்சி நிர்வாகிகள் தலைமைக்கு எதிராக அதிருப்தி அடைந்தனர். அதனால், கட்சித் தலைமை, மேயர் இந்திராணியை மாற்றுவதற்கு முடிவு செய்து புதிய மேயரை தேர்வு செய்யும் பொறுப்பை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, உள்ளூர் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் வசம் ஒப்படைத்தது.
ஆனால், புதிய மேயரை தேர்வு செய்வதில் உள்ளூர் அமைச்சர்கள் இடையே ஒற்றுமை ஏற்படாததால் மேயர் இந்திராணி மாற்றம் தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இதற்கிடையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலை ராஜா மற்றும் அக்கட்சி கவுன்சிலர்கள், கட்சியினர் தலைமையில் மேயரை ராஜினாமா செய்ய கோரி மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அடுத்தக்கட்டமாக மதுரைக்கு பிரச்சாரத்திற்கு வந்த அக்கட்சி பொதுச் செயலாளர் கே.பழனிசாமி, மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டுக்கு பொறுப்பேற்று மேயரை நீக்கம் செய்யாமல் இருப்பது பற்றியும் கேள்வி எழுப்பி திமுக மீது கடுமையாக விமர்சனம் செய்து சென்றார். அதனால், திமுகவுக்கு நெருக்கடி ஏற்படவே மேயரை மாற்றவதற்கு தலைமை முடிவு செய்து, அதன்படி இன்று காலை மேயர் இந்திராணி, ஆணையாளர் சித்ரா ஆகியோரை சென்னைக்கு வரவழைத்து விசாரித்தது.
அதன்பிறகு அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் மேயர் இந்திராணியிடம் ராஜினாமா கடிதத்தை எழுதி வாங்கியுள்ளனர். ஏற்கெனவே நெல்லை, கோவையில் கோஷ்டிபூசலில் மேயர்கள் பதவி பறிக்கப்பட்ட நிலையில், தற்போது ஊழல் புகார் காரணமாக மதுரை மேயர் இந்திராணி பதவியும் பறிக்கப்பட்டுள்ளதால் திமுகவை தாண்டி அனைத்து கட்சி வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாநகராட்சியின் 9-வது புதிய மேயர் வரும் 17-ம் தேதி தேர்வு செய்யப்படவுள்ளார். அன்று துணை மேயர் நாகராஜன் (சிபிஎம்) தலைமையில் மாநகராட்சியில் மாமன்ற அவசர கூட்டத்திற்கு மாமன்ற செயலாளர் நேற்று (அக்.14) இரவே 100 வார்டு கவுன்சிலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், கவுன்சிலர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ”தற்போது வரை புதிய மேயர் தேர்வு செய்யப்படவில்லை. அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாநகர செயலாளர் தளபதி தலைமையில் திமுக கவுன்சிலர்கள் கூடி புதிய மேயரை தேர்வு செய்கிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் நபர், வரும் 17-ம் தேதி நடக்கும் கூட்டத்தில் முறைப்படி புதிய மேயர் பொறுப்பேற்பார்” என்று மாநகராட்சி உயர் அதிகாரி கூறியுள்ளார்.