சார்ஜா,
ஆப்கானிஸ்தான் – வங்காளதேசம் இடையிலான 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என வங்காளதேசம் கைப்பற்றியது. தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 293 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக இப்ராஹிம் ஜட்ரான் 95 ரன் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் சைப் ஹசன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து 294 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. வெறும் 27.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வங்காளதேசம் 93 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக சைப் ஹசன் 43 ரன் எடுத்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் பிலால் சமி 5 விக்கெட், ரஷித் கான் 3 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என ஆப்கானிஸ்தான் முழுமையாக கைப்பற்றியது.