புதுடெல்லி,
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்காது என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:-
கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை கணிசமாக இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. நிலையற்ற எரிசக்தி சூழ்நிலையில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பது எங்கள் நிலையான முன்னுரிமையாக இருந்து வருகிறது. நமது இறக்குமதி கொள்கைகள் முழுமையாக இந்த நோக்கத்தால் வழிநடத்தப்படுகின்றன. நிலையான எரிசக்தி விலைகள் மற்றும் பாதுகாப்பான விநியோகங்களை உறுதி செய்வது நமது எரிசக்தி கொள்கையின் இரட்டை இலக்குகளாக உள்ளன. இதில் சந்தை நிபந்தனைகளைப் பொறுத்து நமது ஆற்றல் ஆதாரங்களை விரிவுப்படுத்துதல் மற்றும் பொருத்தமான முறையில் பன்முகப்படுத்துதல் அடங்கும்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாக எங்கள் எரிசக்தி கொள்முதலை விரிவுபடுத்த முயன்று வருகிறோம். இது கடந்த 10 ஆண்டுகளில் சீராக முன்னேறி வருகிறது. தற்போதைய அமெரிக்க நிர்வாகம் இந்தியாவுடன் எரிசக்தி ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளது. இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில், ரஷியா எண்ணெய் வாங்குவதை நிறுத்தப் போவதாக டிரம்பிடம் பிரதமர் மோடி உறுதி அளித்தாரா, இல்லையா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.