லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் அஜீஸ் நகர் பகுதியில் வசித்து வருபவர் நாசித் அலி. இவரது மகன் அனீஸ் (3 வயது). நேற்று மதியம் அனீஸ் அவர்கள் வசித்து வரும் 3 மாடி கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது மேலே ஒரு பட்டம் பறந்துள்ளது. அதைப் பிடிக்க சிறுவன் முயற்சி செய்துள்ளான். தொடர்ந்து மாடியின் கைப்பிடி சுவரில் ஏறி சிறுவன் பட்டத்தை பிடிக்க முயன்றபோது கால் தவறி மூன்றாவது மாடியில் இருந்து சாலையில் விழுந்தான். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பலத்த காயமடைந்த சிறுவனை மீட்டு பால்ராம்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பட்டத்தை பிடிக்க முயன்ற 3 வயது சிறுவன், மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.