வாஷிங்டன்,
காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குல் நடத்தி 1,200 பேரை கொன்றனர். 200-க்கும் மேற்பட்டவர்களை பணயக் கைதிகளாக பிடித்து சென்றனர். அக்.7-ந் தேதி 2023-ம் ஆண்டு நடந்த இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு காசா மீது போா் அறிவித்தார். 2 ஆண்டுகளாக நீடித்த இந்த போரில் காசாவை சேர்ந்த 67 ஆயிரம் போர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தாண்டு தொடக்கத்தில் பதவியேற்றதை தொடர்ந்து இஸ்ரேல்-காசா போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டார். அதன்படி வெள்ளை மாளிகையில் கடந்த மாத இறுதியில் நடந்த பேச்சுவார்த்தையில் டிரம்ப் 20 அம்ச திட்டத்தை பரிந்துரைத்தார்.இந்த அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் தரப்பில் நெதன்யாகுவும், ஹமாஸ் தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.
அதன்படி ஹமாஸ் வசம் உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகள் முதலில் விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது இறந்த சடலங்களை படிப்படியாக இஸ்ரேலிடம் ஒப்படைத்து வருகிறது. பதிலாக இஸ்ரேல், பாலஸ்தீன கைதிகளை படிப்படியாக விடுவித்து வருகிறது இதற்கிடையே, ஹமாஸ் தனது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் இஸ்ரேல் மீண்டும் ராணுவ நடவடிக்கை எடுக்க அனுமதிப்பது குறித்து பரிசீலிப்பேன் என டிரம்ப் கூறினார்.
இது தொடர்பாக டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியதாவது: “நான் ஒரு வார்த்தை சொன்னால் இப்போது இஸ்ரேல், காசாவின் தெருக்களுக்குத் திரும்பும். இஸ்ரேல் ராணுவத்தினர், காசா உள்ளே சென்று அவர்களைத் தாக்க முடியும். நான் அவர்களை தடுத்து நிறுத்தியிருக்கிறேன். ஹமாஸில் என்ன நடக்கிறதோ அது விரைவில் சரி செய்யப்படும். அவர்கள் ஆயுதங்களை கீழிறக்கவில்லை எனில் நாங்கள் இறக்க வைப்போம். அது மிகவும் மோசமாகவும் விரைவாகவும் நடக்கும்” என்று கூறியுள்ளார்.