ஆமதாபாத்,
பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதன் மூலம் பூபேந்திர படேல் 2-வது முறையாக முதல்-மந்திரி பதவியை தக்க வைத்தார். அவரது மந்திரி சபையில் 16 மந்திரிகள் இடம் பெற்றிருந்தனர். இதில் 8 பேர் கேபினட் அந்தஸ்துடனும், மீதமுள்ளவர்கள் இணை மந்திரிகளாகவும் இருந்தனர்.
பூபேந்திர படேல் மந்திரிசபையில் இணை மந்திரியாக இருந்த ஜகதீஷ் விஸ்வகர்மா இந்த மாத தொடக்கத்தில் மாநில பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டார். மத்திய மந்திரி சி.ஆர்.பாட்டீல் வசம் இருந்த பா.ஜ.க. தலைவர் பதவி, மாநில மந்திரியிடம் வழங்கப்பட்டது. குஜராத் சட்டசபை 182 உறுப்பினர்களை கொண்ட நிலையில், மாநில அரசில் 27 பேர் அல்லது மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் 15 சதவீதம் பேர் மந்திரிகளாக பதவி வகிக்க முடியும்.
அந்த வகையில் மாநில மந்திரி சபை இன்று விரிவாக்கம் செய்யப்படுவதாக நேற்று காலையில் மாநில அரசு தகவல் வெளியிட்டது. அதற்கு வசதியாக முதல்-மந்திரி பூபேந்திர படேலை தவிர அவரது மந்திரிசபையில் இடம்பெற்றிருந்த 16 மந்திரிகளும் மாலையில் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதைத்தொடர்ந்து புதிய மந்திரிசபை இன்று காலையில் பதவியேற்றது.
ரிவாபா ஜடேஜா, ஸ்வரூப் தாக்கூர், பிரவின்பாய் மாலி, தர்ஷ்னா வகேலா, அர்ஜுன் மோத்வாடியா, ஜிதேந்திர வகானி உள்ளிட்ட 21 பேர் புதிய மந்திரிகளாக பதவியேற்றனர். இந்த பதவியேற்பு விழாவில் பாஜக தலைவரும், மத்திய மந்திரியுமான ஜே.பி.நட்டா கலந்து கொண்டார்.
கனுபாய் மோகன்லால் தேசாய், ருஷிகேஷ் படேல், குன்வர்ஜி பவாலியா மற்றும் பர்ஷோத்தம் சோலங்கி ஆகிய நான்கு மந்திரிகளின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவர்கள் மந்திரி சபையில் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் முதல்-மந்திரி பூபேந்திர படேலை சேர்ந்து மந்திரி சபையின் அளவு 26 ஆக அதிகரித்துள்ளது.
சூரத்தைச் சேர்ந்த முக்கிய இளம் தலைவரும், குஜராத்தின் முன்னாள் உள்துறை இணை மந்திரியுமான ஹர்ஷ் சங்வி துணை முதல்-மந்திரியாக பதவியேற்றார். இதன் மூலம் குஜராத் மாநில வரலாற்றில் குறைந்த வயதில் துணை முதல்-மந்திரி பதவியை வகிக்கும் நபர் என்ற பெருமையை அவர் பெற்றார். அவருக்கு வயது 40.
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவும் மந்திரியாக பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019-ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்த ரிவாபா, 2022-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜாம்நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.