புதுடெல்லி,
இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா மூன்று நாள் பயணமாக நேற்று டெல்லி வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் கல்வி – திறன் மேம்பாட்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் பற்றி அவர்கள் விவாதித்ததாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பின்னர் இலங்கை பிரதமர், டெல்லியில் உள்ள இந்து கல்லூரிக்கு சென்றார். இவர் இந்த கல்லூரியின் முன்னாள் மாணவி ஆவார். பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த நிலையில் இன்று ஹரிணி அமரசூரியா, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியாவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், புதுமையான கண்டுபிடிப்புகள், மேம்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் நமது மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.
நெருங்கிய அண்டை நாடுகளாக, நமது இரு நாட்டு மக்களின் செழிப்புக்கும், பகிரப்பட்ட பிராந்தியத்திற்கும் நமது ஒத்துழைப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது” என்று தெரிவித்துள்ளார்.