மைசூரு,
மைசூருவில் 2 நாட்கள் புத்தர் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டின் நிறைவு நாளில் நடிகர் பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
எந்த மதம், தர்மம் மனிதர்களை மனிதர்களாக காண்வதில்லையோ, மனிதாபிமான தன்மையை வளர்த்துக் கொள்ளவில்லையோ அது மதமே இல்லை. நூற்றாண்டு விழா கொண்டாடுபவர்களுக்கு மதத்தின் மூலமாகவே அடி கொடுக்க வேண்டும். கழுதைக்கு புத்தி வரவில்லை என்ற பழமொழி போல ஒரு அமைப்பு நூறு ஆண்டுகளை கடந்திருந்தாலும் அதற்கு இன்னும் புத்தி வரவில்லை.
புத்தர், அம்பேத்கர் எந்த மதத்திற்கும் சேர்ந்தவர்கள் அல்ல. ஆனால், ஒரு சிலர் கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் இருக்கும் ஆல்-ரவுண்டர் விளையாட்டு வீரர்கள் மாதிரி, யார் அதிகமாக ரன் அடிக்கிறார்களோ அவர் பக்கம் போகிறார்கள். நமக்கு மனிதர்கள் மனிதத்தன்மை முக்கியம். ஒரு மனிதனுக்கு கஷ்டம் என்று வந்தால் அவருக்கு உடனே உதவி செய்யும் மனப்பான்மை இருக்க வேண்டும். அவர்களது கஷ்டத்தை போக்கும் மனப்பான்மை வரவேண்டும்.
இயற்கையை விட எந்த ஒரு கடவுளும் இல்லை. மக்கள் எல்லோரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அன்பு, பாசத்தால் எல்லாவற்றையும் வெல்ல முடியும். ஆனால் இன்று இந்த ராட்சசன் உலகில் சமத்துவத்திற்காக போராட்டம் நடத்த வேண்டியது மூலமாக வெற்றியடைய முடியும். அதற்காக போராட்டங்களை தொடர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.