வாஷிங்டன்,
உக்ரைன், ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இந்த போரால் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை மூலம் உக்ரைன்-ரஷியா மோதலுக்கு தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் குறிப்பிடத்தக்க தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. இதனிடையே, ரஷியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது கடுமையான வரிவிதிப்பு நடவடிக்கைகளை டிரம்ப் மேற்கொண்டார்.
இந்த சூழலில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேச உள்ளார். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. இந்த சந்திப்பின்போது உக்ரைனின் பாதுகாப்பு, ஆற்றல் தேவைகள் மற்றும் ரஷியா மீதான தடைகளை அதிகரிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நேற்று ரஷிய அதிபர் புதினை தொடர்பு கொண்டு டிரம்ப் பேசினார். அந்த உரையாடலின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், விரைவில் புதினை நேரில் சந்தித்து பேச உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அலாஸ்காவில் இருவரும் சந்தித்து பேசிய நிலையில், 2-வது பேச்சுவார்த்தை ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் நடைபெற உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.