திருவனந்தபுரம்: சபரிமலையில் தங்கம் திருடுபோன விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.
சபரிமலை கோயிலில் உள்ள துவாரபாலகர் சிலையில் இருந்த தங்கம் திருடு போனது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் அமைத்த எஸ்ஐடி குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
எஸ்ஐடி-யைப் பொறுத்தவரையில் இரண்டு வழக்குகளை விசாரித்து வருகிறது. ஒன்று, துவாரபாலகர் சிலைகளில் இருந்த தங்கம் மாயமானது தொடர்பானது. மற்றொன்று கோவில் கதவில் இருந்த சட்டங்களில் இந்த தங்கம் காணாமல் போனது தொடர்பானது.
இந்த நிலையில்தான், பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணனை எஸ்ஐடி கைது செய்து பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை உன்னிகிருஷ்ணனை சிறப்பு விசாரணைக் காவலில் வைக்கப்படுவார் என்று தெரிகிறது.
சபரிமலை மேற்பார்வையின் கீழ் அமைக்கப்பட்ட எஸ்ஐடி இந்த வழக்கை கையில் எடுத்த 5-வது நாளில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு தங்கத் தகடுகள், உன்னிகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டபோது அவற்றின் எடை சுமார் நான்கு கிலோ வரை குறைந்ததை விசாரணையின்போது உயர் நீதிமன்ற அமர்வு சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.