சென்னை: கடந்த இரண்டு நாட்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து முதல் நாள் 1 லட்சத்து 28 ஆயிரம் பேரும், இரண்டாவது நாள் 2 லட்சத்து 28 ஆயிரம் பேரும் என 3 லட்சத்து 56 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் செந்துறையிலிருந்து சென்னை மாதவரத்துக்கு, குளிர்சாதன வசதி பேருந்து சேவையினை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று (அக்.18) தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறியதாது: “கடந்த இரண்டு நாட்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வந்திருந்த அனைத்து பயணிகளும், எந்தவித சிரமமும் இல்லாது பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முதல் நாள் 1 லட்சத்து 28 ஆயிரம் பேரும், இரண்டாவது நாள் 2 லட்சத்து 28 ஆயிரம் பேரும் என 3 லட்சத்து 56 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர்.
கடந்தாண்டு 1.68 லட்சம் பயணிகள் அரசுப் பேருந்தில் முன்பதிவு செய்து பயணம் செய்த நிலையில், நிகழாண்டு 2 நாட்களில் 2.80 லட்சம் பேர் முன்பதிவு செய்து பயணம் செய்திருப்பது அரசுப் பேருந்துகள் மீது, மக்கள் நம்பிக்கை கொண்டிருப்பதைக் காட்டுகிறது
ஆம்னி பேருந்துகள் அதிகக் கட்டணம் தொடர்பாக புகார் வந்திருந்தது. ஆம்னி பேருந்து உரிமையாளர்களை அழைத்து அறிவுரை வழங்கி அதையும் சரி செய்துவிட்டோம்.
பண்டிகை பயணத்துக்கு, தனியார் ஆம்னி பேருந்துகளை நாடுபவர்கள் கூட தற்பொழுது அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கின்றனர். மேலும் கரோனா காலத்தில் இருந்து இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்து வந்த நிலையில், தற்போது அதிகளவில் அரசுப் பேருந்து மூலம் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். மிகுந்த கவனத்துடன் ஒவ்வொரு பண்டிகைக்கும் போக்குவரத்து துறை, முன்கூட்டியே திட்டமிட்டு பேருந்துகளை இயக்கி வருகிறோம்.
இதனால் எந்தவித பிரச்சினையும் இன்றி மக்கள் பயணம் செய்கின்றனர். முன்பதிவு செய்த பயணிகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே வந்து, பொறுமையுடன் கிளாம்பாக்கத்தில் இருந்து தங்கள் பயணத்தை மேற்கொள்கின்றனர்.
தனியார் பேருந்துகளை ஒப்பந்தத்தில் எடுத்து பயணிகளுக்கு சேவையாற்றி வருகிறோம். அரசுப் பேருந்தில் என்ன கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ, அதே கட்டணம் தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும்.
வடகிழக்கு பருவ மழையைப் போர்க்கால அடிப்படையில் எதிர்கொள்ள தயார் நிலையில் மின்சார வாரியம் உள்ளது. போதிய மின் கம்பங்கள் மற்றும் பணியாளர்கள் என அனைவரும் தயார் நிலையில் உள்ளனர்.” என்றார்.