முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடியாக அண்ணாமலை எழுப்பிய கேள்விகள்!

சென்னை: ‘2023-24-ம் ஆண்டு சிஏஜி அறிக்கையின்படி 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.14,808 கோடி நிதி செலவிடப்படாமல் வீணாக்கியது ஏன்?’ என்பன உள்ளிட்ட கேள்விகளை முதல்வர் ஸ்டாலினுக்கு எழுப்பி இருக்கிறார் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை.

முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவு ஒன்றில், “நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களின் நெஞ்சங்களிலும் ஏராளமான கேள்விகள் நிரம்பியுள்ளன. அவற்றில் சிலவற்றை நான் கேட்கிறேன். ஊழல்வாதிகள் பாஜகவின் கூட்டணிக்கு வந்தபின்பு, வாஷிங்மிஷனில் வெளுப்பது எப்படி, நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் இந்தியிலும் சம்ஸ்கிருதத்திலும் மட்டுமே பெயரிடப்படுவது என்ன மாதிரியான ஆணவம்?

மத்திய அமைச்சர்களே நம் குழந்தைகளை அறிவியலுக்குப் புறம்பான மூடநம்பிக்கைகளைச் சொல்லி மட்டுப்படுத்துவது ஏன், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள், பாஜகவின் தேர்தல் வெற்றிக்காக, மக்களின் வாக்குகளைப் பறிக்கும் வாக்குத் திருட்டை எஸ்ஐஆர் ஆதரிப்பது ஏன்?

இரும்பின் தொன்மை குறித்து அறிவியல்பூர்வமாகத் தமிழகம் மெய்ப்பித்த அறிக்கையைக்கூட அங்கீகரிக்க மனம்வராதது ஏன், கீழடி அறிக்கையைத் தடுக்கக் குட்டிக்கரணங்கள் போடுவது ஏன், இதற்கெல்லாம் பதில் வருமா இல்லை வழக்கம்போல, வாட்சப் யூனிவர்சிட்டியில் பொய்ப் பிரசாரத்தைத் தொடங்குவீர்களா?” என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, ஜிஎஸ்டி சீர்திருத்தம், சாலை திட்டங்கள், ரயில் திட்டங்கள், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், ஓய்வூதியத் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், நிதி பகிர்வு உள்ளிட்டவை தொடர்பாக, மத்திய அரசுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு எழுப்பிய 10 கேள்விகளுக்கு பதில் அளித்து சமூக வலைதளத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

அத்துடன், முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி தரும் வகையில் அவர் எழுப்பிய கேள்விகள்: ‘2023-24-ம் ஆண்டு சிஏஜி அறிக்கையின்படி 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.14,808 கோடி நிதி செலவிடப்படாமல் வீணாக்கியது ஏன்? 2023-24-ம் ஆண்டு மக்களிடம் வசூலிக்கப்பட்ட மின்சார வரி ரூ.1,985 கோடி. இதில் ரூ.507 கோடி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிதிக்கு செலுத்தாமல் மடைமாற்றியது ஏன்?

2021-22 முதல் 2023-24 வரையிலான 3 ஆண்டுகளில் மத்திய அரசிடம் பெற்ற ஜிஎஸ்டி இழப்பீடு தொகையான ரூ.28,024 கோடியில் 10 சதவீதம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டும் என்பது மாநில திட்டக்குழுவின் பரிந்துரை. ஆனால், இவை வழங்கப்படவில்லை ஏன்?

தேர்தலின்போது 511 வாக்குறுதிகள் திமுக சார்பில் கொடுக்கப்பட்டன. இவையன்றி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனியாக வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது. இவற்றில் 10 சதவீத வாக்குறுதிகளை கூட நிறைவேற்றாமல் 2026 சட்டப்பேரவை தேர்தலை எப்படி சந்திப்பீர்கள்? ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தமிழகத்தின் கடன் சுமையை குறைப்போம் என்று கூறி, கடந்த 4 ஆண்டுகளில் சுமார் ரூ.5 லட்சம் கோடி புதிதாக கடன் வாங்கியது ஏன்?” என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.