மொத்த பாகிஸ்தானும் பிரம்மோஸ் ஏவுகணையின் வரம்புக்குள் உள்ளது: ராஜ்நாத் சிங்

லக்னோ: பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் நமது பிரம்மோஸ் ஏவுகணையின் வரம்புக்குள்தான் உள்ளது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் அமைக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி மற்றும் சோதனை மையத்தில் இருந்து முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணைகள் வெற்றிகரமாக வெளியாகி உள்ளன. பிரம்மோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுதியை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், “நமது ராணுவத்தின் வெற்றி என்பது நிகழும் ஒரு சம்பவம் அல்ல; மாறாக அது நமது ராணுவத்தின் வழக்கம் என்பதை ஆபரேஷன் சிந்தூர் நிரூபித்துவிட்டது. நமது எதிரிகள் இனி பிரம்மோஸ் ஏவுகணையிடம் இருந்து தப்பிக்க முடியாது என்று நாடு நம்பிக்கை கொண்டுள்ளது. பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் நமது பிரம்மோஸ் ஏவுகணை அடையும் வரம்புக்குள்தான் உள்ளன.

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது நடந்தது வெறும் ட்ரெய்லர் மட்டுமே. அந்த ட்ரெய்லரே, இந்தியா மறு பிறப்பை கொடுத்துள்ளது என பாகிஸ்தான் எண்ணிப் பார்க்கும் வகையில் அமைந்துவிட்டது. அப்படியானால், நமது முழுப் பலமும் வெளிப்படுமானால்.. அதற்கு மேல் நான் சொல்ல விரும்பவில்லை.

பிரம்மோஸ் குழுவினர் ஒரு மாதத்துக்குள் இரண்டு நாடுகளுடன் ரூ.4,000 கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்களில் கையழுத்திட்டுள்ளார்கள். வரும் ஆண்டுகளில், வெளிநாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் லக்னோவுக்கு வருவதைக் காண்போம். லக்னோவில் உள்ள இந்த பிரம்மோஸ் மையம், ஒரு அறிவு மையமாகவும் பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமாகவும் வரும் ஆண்டுகளில் மாறும். அடுத்த நிதியாண்டில் இருந்து பிரம்மோஸ் லக்னோ பிரிவின் ஆண்டு வருவாய் ரூ. 3,000 கோடியாக இருக்கும். ஜிஎஸ்டி வருவாய் ரூ. 5,000 கோடியாக இருக்கும்” என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.