வாஷிங்டன்,
உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷியா போர் தொடுத்ததை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்ததுடன், அந்த நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியையும் ரத்துசெய்தன. இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு மலிவு விலையில் ரஷியா கச்சா எண்ணெய் வழங்கியது. இதை பயன்படுத்தி இந்தியாவும் அதிக அளவில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது.
அந்த வகையில் கடந்த 2018-20-ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் வெறும் 1.7 சதவீதமாக இருந்த ரஷியாவின் பங்கு, 2023-24-ம் ஆண்டில் 40 சதவீதமாக அதிகரித்தது. அதன் மூலம் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை பிடித்து உள்ளது. இவ்வாறு ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அத்துடன் ரஷிய எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா மீது 25 சதவீத கூடுதல் வரியையும் டிரம்ப் நிர்வாகம் விதித்தது.
இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி திடீரென ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதாவது ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துவதாக பிரதமர் மோடி உறுதியளித்து உள்ளார் என கூறினார். ஆனால் இது குறித்து பேசிய மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் அப்படி ஒரு போன் உரையாடல் நடத்தியது எனக்கு தெரியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதற்கிடையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று டிரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது உக்ரைனின் பாதுகாப்பு, ஆற்றல் தேவைகள் மற்றும் ரஷியா மீதான தடைகளை அதிகரிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிரம்ப், “ரஷியாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது. அவர்கள் ஏற்கனவே பின்வாங்க தொடங்கிவிட்டனர். கிட்டத்தட்ட ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது” என்று தெரிவித்தார். அதே சமயம், அக்டோபர் மாதத்தின் முதல் பாதியில் இந்தியா ரஷிய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.