“1987-ல் கலைஞர் கைதானப்போ `கலைஞரின் நீதிக்கு தண்டனை' படம் எடுத்தேன்; இன்னைக்கு என் ரத்தம்…" – SAC

இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின் மகனும், நடிகருமான விஜய் கடந்த 2024 பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியிருந்தார்.

கட்சி ஆரம்பித்த ஒன்றரை ஆண்டில் இரண்டு மாநாடு , பரந்தூர் மக்களுக்கு ஆதரவாகப் போராட்டம், சிவகங்கை லாக்கப் டெத் விவகாரத்தில் போராட்டம் ஆகிய செயல்களில் இறங்கிய விஜய் கடந்த செப்டம்பரில் மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் தொடங்கினார்.

இதில், செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.

TVK Vijay
TVK Vijay

இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் சென்று தற்போது வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டிருக்கிறது.

மறுபக்கம், சம்பவம் நடந்த மூன்றாவது நாளில் இரங்கல் வீடியோ வெளியிட்ட சில நாள்கள் கழித்து பாதிக்கப்பட்டவர்களிடம் வீடியோ காலில் பேசிய விஜய் அடுத்ததாக அவர்களை நேரில் பார்க்க திட்டமிட்டிருக்கிறார்.

இவ்வாறிருக்க அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தான் த.வெ.க-வில் இருப்பதாகவும், தன் ரத்தமான விஜய் துணிச்சலாக இருப்பதாகவும் பேசியிருக்கிறார்.

DeSIFMA (De Sales International Film & Media Academy) பட்டமளிப்பு விழாவில் பேசிய எஸ்.ஏ. சந்திரசேகர், “சினிமாவை வெறும் பொழுதுபோக்காக மட்டும் எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களால் முடிந்த நல்ல விஷயத்தை படத்தில் சொல்லுங்கள். சினிமாவைப் போன்ற ஒரு பவர்ஃபுல் மீடியா வேறு கிடையவே கிடையாது.

நான் எந்தக் கட்சியும் கிடையாது. இப்போது நான் த.வெ.க, 2 வருடத்துக்கு முன்பு வரைக்கும் நான் எந்தக் கட்சியிலும் இல்லை. ஆனால், அண்ணா, பெரியார், கலைஞரைப் பிடிக்கும்.

1987-ல் கலைஞரை கைது பண்ணினப்போ எனக்கு கஷ்டமாக இருந்தது. மூன்றாவது நாள், `கலைஞரின் நீதிக்கு தண்டனை-னு’ நான் விளம்பரம் கொடுத்தேன்.

எஸ்.ஏ.சந்திரசேகர்
எஸ்.ஏ.சந்திரசேகர்

அப்போ அவர் எதிர்க்கட்சித் தலைவர். எம்.ஜி.ஆர் என்ற பவர் ஆண்டு கொண்டிருந்தது.

கலைஞரின் நீதிக்கு தண்டனை-னு படம் எடுக்கிறேன், ரிலீஸ் ஆகுது, சி.எம் கூப்டாரு… எப்படியிருக்கும்.

ஒரு தப்பு நடக்குது, என்கிட்ட ஒரு ஆயுதம் இருக்கு அதை நான் யூஸ் பண்றேன். இப்போதெல்லாம் அப்படி படம் எடுக்க முடியாது.

ஒருமுறைதான் பிறக்கிறோம், ஒருமுறைதான் சாகப்போறோம். இதற்கிடையில், எதற்கு தினமும் பயந்து வாழனும். என் ரத்தம், ஜீன்தான் இப்போ…” என்று தன் மகன் விஜய்யைக் குறிப்பிட்டு தனது உரையை முடித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.