நாசிக்: எச்ஏஎல் நிறுவனத்தின் நாசிக் மையத்தில் தயாரிக்கப்பட்ட முதல் தேஜஸ்-1ஏ ரக போர் விமானம் தனது முதல் பறக்கும் சோதனையை நிறைவு செய்தது.
இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்துக்கு (எச்ஏஎல்) பெங்களூருவில் இரண்டு விமான தயாரிப்பு நிலையங்கள் உள்ளன. இந்நிலையில் ஆண்டுக்கு 8 போர் விமானங்கள் தயாரிக்கும் வகையில் 3-வது விமான தயாரிப்பு மையம் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் அமைக்கப்பட்டது.
எச்ஏஎல் நிறுவனத்திடம் தேஜஸ் 1ஏ ரக போர் விமானங்கள் தயாரிக்க இந்திய விமானப்படை ஆர்டர் கொடுத்துள்ளது. தேஜஸ் 1ஏ ரக போர் விமானம் நடுவானில் எரிபொருள் நிரப்பும் வசதியுடன் தயாரிக்கப்படுகிறது. இந்த ரக விமானத்தில் பொருத்துவதற்கான ஜிஇ எப்404 இன்ஜின்கள் வாங்க கடந்த 2021-ம் ஆண்டு ரூ.5,375 கோடிக்கு எச்ஏஎல் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் அமெரிக்க நிறுவனம் இதுவரை 4 இன்ஜின்களை மட்டுமே வழங்கியுள்ளது. அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் கூடுதலாக 8 இன்ஜின்களும், அதன்பின் ஆண்டுக்கு 20 இன்ஜின்களை வழங்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்த தாமதத்தால் எச்ஏஎல் நிறுவனம் தேஜஸ் 1ஏ விமான தயாரிப்பும் தாமதமாகிறது.
இந்நிலையில், நாசிக் மையத்தில் தயாரான தேஜஸ் 1ஏ போர் விமானத்தின் முதல் பறக்கும் சோதனை நேற்று நிறைவடைந்தது. அப்போது அந்த விமானத்துக்கு வாட்டர் சல்யூட் அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். அதற்கு முன்பாக இலகு ரக போர் விமானம் மற்றும் எச்டிடி-40 பயிற்சி விமானம் ஆகியவற்றின் தயாரிப்பு மையத்தையும் அவர் திறந்து வைத்தார்.
தேஜஸ் 1ஏ போர் விமானத்தில் ரேடார் மற்றும் ஆயுத சோதனைகள் முடிவடைந்தவுடன் அந்த விமானம் விமானப்படையில் இணைக்கப்படும்.