சியோல்,
கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
இதனிடையே, வடகொரியா – தென்கொரியா எல்லையில் இருநாட்டு ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உலகிலேயே மிகுந்த பதற்றம் நிறைந்த ராணுவ எல்லையாக இப்பகுதி பார்க்கப்படுகிறது. ஆனாலும், பொருளாதார காரணங்கள், வறுமை, அடக்குமுறை உள்பட பல்வேறு காரணங்களுக்காக வடகொரியாவை சேர்ந்த பலரும் சட்டவிரோதமாக தென்கொரியாவுக்குள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கடந்த ஆண்டு மட்டும் வடகொரியாவை சேர்ந்த 236 பேர் தென்கொரியாவுக்குள் நுழைந்துள்ளனர். இதில் 200க்கும் மேற்பட்டோர் பெண்கள் ஆவர்.
இந்நிலையில், வடகொரிய ராணுவ வீரர் இன்று அத்துமீறி தென்கொரிய எல்லைக்குள் நுழைந்துள்ளார். அவரை தென்கொரிய ராணுவ வீரர்கள் கைது செய்தனர். இருநாட்டு எல்லையில் கண்ணிவெடிகள் அதிகம் புதைக்கபட்ட பகுதி வழியாக அந்த ராணுவ வீரர் தென்கொரியாவுக்குள் நுழைந்துள்ளார். அந்த வடகொரிய ராணுவ வீரரை கைது செய்த தென்கொரிய ராணுவ வீரர்கள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.