தொடர் கனமழையால் பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்வு

கனமழையால் முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் ஒரேநாளில் 6 அடி உயர்ந்தது. நீர்வரத்து 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்ததால் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு, கேரள பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தமிழக கேரள எல்லையில் கனமழை பெய்து வருவதால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் காலையில் 2,748 கனஅடியாக இருந்த நீர்வரத்து இரவு 11 மணிக்கு 40 ஆயிரத்து 733 கனஅடியாக அதிகரித்தது. அணை நீர்மட்டம் 132 அடியில் இருந்து 138 அடியாக உயர்ந்தது.

முல்லை பெரியாறு அணையின் மதகுகள் கேரளப் பகுதியை நோக்கி அமைந்துள்ளன. தமிழகப் பகுதிக்கு அதிகபட்சமாக 2,400 கனஅடி நீர் மட்டுமே திறக்கும் வசதி உள்ளது. எனவே, வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதெல்லாம் கேரளப் பகுதிக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டு, அம்மாநிலம் வழியே உபரிநீர் திறக்கப்படுவது வழக்கம். மேலும், நீர்த்தேக்க கால அட்டவணைபடி (ரூல் கர்வ்) தற்போது 137.75 அடி நீரே தேக்கும் நிலை உள்ளது.

எனவே, நேற்று இடுக்கி மாவட்டத்துக்கு முதல்கட்ட அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து, காலை 8 மணிக்கு 3 மதகுகள் முக்கால் மீட்டர் உயர்த்தப்பட்டு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டது. பின்பு அணைக்கான நீர்வரத்துக்கு ஏற்ப நீர் வெளியேற்றத்தின் அளவும் ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. நேற்று மதியம் 1 மணிக்கு 7ஆயிரத்து 163 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

இந்த நீர் இடுக்கி மாவட்டம் வல்லக்கடவு, சப்பாத்து, வண்டிப்பெரியாறு, மஞ்சுமலை, உப்புத்துறை, ஏலப்பாறை வழியாக செல்வதால் அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆற்றங்கரையில் வசித்து வரும் 43 குடும்பங்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். தமிழகப் பகுதிக்கு தற்போது விநாடிக்கு 1,400 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, “ஏற்கெனவே தேனி மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, முல்லை பெரியாறு அணையில் இருந்து குறைவான நீரே தமிழகப் பகுதிக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.