சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆர்.வேல் ராஜ் மீது எடுக்கப்பட்ட சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்து ஆளுநர் பிறப்பித்த உத்தரவை நிராகரிக்க பல்கலைக்கழக சிண்டிகேட் பரிந்துரை செய்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் ஆர்.வேல்ராஜ் பணியாற்றிய காலத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், அவரது பதவிக்காலம் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி முடிவடைய இருந்த நேரத்தில் ஒரு நாளுக்கு முன்பாக தமிழக அரசு அவரை சஸ்பெண்ட் செய்தது.
இந்த நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி வேல்ராஜ் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில், அவர் மீது எடுக்கப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவை ஆளுநர் ஆர்.என்.ரவி ரத்துசெய்ததுடன் அவரது ஓய்வுக்கால பணப்பலன்களை வழங்கவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பல்கலைக்கழக நிர்வாகத்தை கவனித்து வரும் உயர்கல்வித் துறை செயலர் பொ.சங்கர் தலைமையிலான கன்வீனர் குழுவினர் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது, முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்துசெய்து ஆளுநர் பிறப்பித்த உத்தரவை நிராகரிக்க வேண்டும் என்று சிண்டிகேட் உறுப்பினர்கள் பரிந்துரை செய்தனர்.
மேலும், தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலி பேரா சிரியர் நியமன விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அமைத்த விசாரணைக்குழு தனது அறிக்கையை சிண்டிகேட் கூட்டத்தில் சமர்ப்பித்தது.