சண்டிகர்: ஹரியாணாவின் பஞ்ச்குலா நகரை தலைமையிடமாகக் கொண்டு மிட்ஸ்கார்ட் மருந்து தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவராக பாட்டியா உள்ளார்.
ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின்போதும் தனது ஊழியர்களுக்கு சொகுசு கார்களை பரிசாக வழங்குவதை பாட்டியா வாடிக்கையாக கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு தீபாவளியின்போது அவர் 15 பேருக்கு கார்களை வழங்கினார். இந்த ஆண்டு 51 பேருக்கு அவர் கார்
களை பரிசாக வழங்கியிருக்கிறார். இதுகுறித்து பாட்டியா நிருபர்களிடம் கூறியதாவது:
எனது மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் முதுகெலும்பாக ஊழியர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தீபாவளி பண்டிகையின்போது நிறைவான போனஸை வழங்குகிறேன். மேலும் மிகச் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு கார்களை பரிசாக வழங்கி வருகிறேன். இதன்காரணமாக ஊழியர்கள் மிக கடினமாக உழைத்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கார்களை பரிசாக பெறும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த தீபாவளியின்போது 51 ஊழியர்களுக்கு சொகுசு கார்களை பரிசாக வழங்கி உள்ளேன். ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது அந்த நிறுவனம் அபரிதமாக வளர்ச்சி அடையும். அடுத்த ஆண்டு இதைவிட அதிக ஊழியர்கள் கார்களை பரிசாக பெறுவார்கள். இவ்வாறு பாட்டியா தெரிவித்தார்.
பஞ்ச்குலாவில் நடைபெற்ற விழாவில் மிட்ஸ்கார்ட் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் 51 ஊழியர்கள் கார்களை பரிசாக பெற்றுக் கொண்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் பஞ்ச்குலா நகரில் கார்களில் ஊர்வலமாக வந்தனர்.