பெர்த்,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் போட்டி தொடர் நடைபெறுகிறது. அதன்படி இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்சேல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கையில் அவ்வப்போது மழை குறுக்கிட்டது. அதன் காரணமாக இந்த போட்டி 50 ஓவர்களுக்கு பதிலாக 26 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த சூழலில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 26 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 136 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 38 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசல்வுட், ஓவன், மேத்யூ குனேமான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து டி.எல்.எஸ். விதிகளின்படி ஆஸ்திரேலிய அணி 26 ஓவர்களில் 131 ரன்களை எடுக்க வேண்டும் என வெற்றி இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியா 21.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் மிட்செல் மார்ஷ் 46 ரன்கள் அடித்தார். அவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி அளித்த பேட்டியில், “ உண்மையை சொல்ல வேண்டும் என்றால் கடந்த 15-20 ஆண்டுகளாக நான் தொடர்ச்சியாக நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். பெரிய அளவில் ஓய்வு எடுத்ததில்லை என்பது உங்களுக்கே தெரியும். சர்வதேச கிரிக்கெட்டுடன், ஐ.பி.எல்.-லையும் சேர்த்தால் அனேகமாக நான்தான் அதிகமான போட்டிகளில் விளையாடி இருப்பேன்.
அதன் பிறகு இப்போதுதான் நிறைய நாட்கள் ஓய்வு கிடைத்தது. குழந்தைகள், மனைவியுடன் நிறைய நேரத்தை செலவிட்டது அழகான தருணம். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. அதே சமயம் இத்தகைய இடைவெளி நான் புத்துணர்ச்சியுடன் திரும்புவதற்கு உதவிகரமாக இருக்கிறது. முன்பு எப்போதையும் விட இப்போது நல்ல உடல்தகுதியுடன் இருப்பதாக உணர்கிறேன்.
சிறுவயதில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளை அதிகாலையிலேயே டி.வி.யில் பார்ப்பேன். பந்து பிட்ச்சாகி முகத்தை நோக்கி சீறும் பந்துகளை பார்க்கும்போது, நாமும் இதே அணிக்கு எதிராக இப்படியொரு பந்து வீச்சை திறம்பட எதிர்கொண்டால், பெருமைமிக்க ஒரு வீரராக உருவெடுக்க முடியும் என நினைத்து பார்த்தது உண்டு. அதுவே எனக்கு உந்து சக்தியாக இருந்தது.
ஆரம்பத்தில் இங்குள்ள பகைமையான சூழலில் பங்கெடுப்பதை காட்டிலும் டி.வி.யில் பார்ப்பதே எளிது என உணர்ந்தேன். இருப்பினும் இது போன்ற கடினமான நிலையை எல்லாம் கடந்து என்னை ஒரு நல்ல கிரிக்கெட் வீரராகவும், மனிதராகவும் மாற்றுவதற்கு வழிவகுத்ததற்காக நன்றி கடன்பட்டுள்ளேன். ஆஸ்திரேலியாவில் விளையாடுவது எப்போதும் உற்சாகமாக இருக்கும்” என்று கூறினார்.