பாட்னா,
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 11ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஐக்கிய ஜனதா தளம், பாஜக இடையேயான ஆளும் கூட்டணியில் மாநில முதல்-மந்திரியாக நிதிஷ் குமார் செயல்பட்டு வருகிறார். அதேவேளை, எதிர்க்கட்சிகளாக உள்ள ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.
இதனிடையே, ஜார்க்கண்ட்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் செயல்பட்டு வருகிறார். அவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
அதேவேளை, பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி அமைத்துள்ள நிலையில் அந்த கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் , ராஷ்டிரிய ஜனதா தளம் இடையே குழப்பம் நீடித்து வருகிறது. தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் 143 தொகுதிகளில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளார். மேலும், இந்த தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும் அறிவித்துள்ளார். அந்த கூட்டணியில் உள்ள காங்கிரஸ் இதுவரை 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
இதனால் கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக குழப்பம் நீடித்து வருகிறது. இதையடுத்து, பீகார் தேர்தலில் 6 தொகுதிகளில் தனித்து போட்டியிடப்போவதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா நேற்று முன் தினம் அறிவித்தது. இதனால் பீகார் தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்கத்தொடங்கியது.
இந்நிலையில், பீகார் தேர்தலில் இருந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா பின்வாங்கியுள்ளது. பீகார் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அக்கட்சி அறிவித்துள்ளது. அடுத்தடுத்த இந்த அறிவிப்புகளால் ஜார்க்கண்ட்டில் நடைபெற்று வரும் இந்தியா கூட்டணி அரசில் குழப்பம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.