திருவனந்தபுரம்,
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டம் நடுமங்காடு பகுதியில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் எஸ்டிபிஐ (இந்திய சமூக ஜனநாயக கட்சி) கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. எஸ்டிபிஐ கட்சி சேர்ந்த சிலர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நடுமங்காடு நிர்வாகியை தாக்கியுள்ளனர். இதையடுத்து, இந்த மோதல் இரு கட்சி நிர்வாகிகள் இடையேயான மோதலாக மாறியது.
இந்நிலையி, மோதல் தீவிரமடைந்த நிலையில் எஸ்டிபிஐ கட்சியினரால் இயக்கப்பட்டு வந்த ஆம்புலன்சுகளுக்கு நேற்று இரவு தீ வைக்கப்பட்டது. மேலும், எஸ்டிபிஐ கட்சியினரின் வீடுகள் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டன. கார்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இந்த மோதலால் நடுமங்காடு பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நடுமங்காடு பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.