கட்டம் கட்டிய மும்பை இந்தியன்ஸ்! இந்த 5 வீரர்களுக்கு இனி இடம் இல்லை!

இந்தியன் பிரீமியர் லீக் 2026ம் ஆண்டுக்கான மினி ஏலம் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அணிகளும் தங்கள் வீரர்களை தக்கவைப்பது மற்றும் விடுவிப்பது குறித்த தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, கடந்த சீசனில் சிறப்பாக விளையாடி பிளே-ஆஃப் சுற்று வரை முன்னேறினாலும், கோப்பையை வெல்ல தவறியது. இந்நிலையில், அடுத்த ஆண்டு சீசனுக்காக ஒரு வலுவான அணியை கட்டமைக்கும் நோக்கில், தங்கள் auction purse அதிகரிக்க, சில முக்கிய வீரர்களை அணியில் இருந்து விடுவிக்க மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நவம்பர் 15ம் தேதிக்குள் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்பதால், இந்த விவாதம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், மும்பை அணியிலிருந்து விடுவிக்கப்பட வாய்ப்புள்ள 5 வீரர்கள் யார் என்று பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

தீபக் சாஹர் (Deepak Chahar)

இந்த பட்டியலில் மிகவும் அதிர்ச்சியளிக்கும் பெயர் தீபக் சாஹர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திரமாக வலம் வந்த இவரை, கடந்த ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.9.25 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கியது. ஆனால், அவரது செயல்பாடு அந்த விலைக்கு ஏற்றதாக அமையவில்லை. கடந்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடி வெறும் 11 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். மேலும், இவரது தொடர்ச்சியான காயங்கள் மற்றும் உடற்தகுதி பிரச்சினைகள் அணிக்கு ஒரு பெரிய தலைவலியாக உள்ளது. பும்ரா, போல்ட் போன்ற முன்னணி பந்துவீச்சாளர்கள் இருப்பதால், இவ்வளவு பெரிய தொகைக்கு இவரை தக்கவைப்பது தேவையற்றது என நிர்வாகம் கருதுவதாக கூறப்படுகிறது.

கர்ண் சர்மா (Karn Sharma)

மூத்த லெக்-ஸ்பின்னர் ஆன கர்ண் சர்மாவின் பெயரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அடுத்த ஐபிஎல் சீசனுக்குள் இவருக்கு 38 வயதாகிவிடும் என்பது ஒரு முக்கிய காரணம். கடந்த சீசனில் காயம் காரணமாக 5 போட்டிகளில் மட்டுமே விளையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கில், இவரை அணியிலிருந்து விடுவிக்க மும்பை இந்தியன்ஸ் முடிவு செய்யலாம்.

அல்லா முகமது கஸன்ஃபர் (Allah Mohammad Ghazanfar)

ஆப்கானிஸ்தானை சேர்ந்த இந்த இளம் சுழற்பந்து வீச்சாளரை மும்பை அணி ரூ.4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், கடந்த சீசன் முழுவதும் ஒரு போட்டியில் கூட இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அணியில் நியூசிலாந்து வீரர் மிட்செல் சான்ட்னர் சிறப்பாக செயல்பட்டதால், இவருக்கான தேவை ஏற்படவில்லை. ஒரு போட்டியில் கூட விளையாடாத ஒரு வீரருக்காக இவ்வளவு பெரிய தொகையை செலவழித்திருப்பது வீண் என நிர்வாகம் கருதுகிறது.

ரீஸ் டாப்லி (Reece Topley)

இங்கிலாந்தை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான ரீஸ் டாப்லியும் கடந்த சீசனில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். அதில் அவர் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் விடுவிக்கப்பட்ட இவரை, மும்பை அணி வாங்கியது. ஆனால், வாய்ப்புகள் வழங்கப்படாததால், இவரையும் விடுவித்து, அந்த இடத்தில் ஒரு சிறந்த வெளிநாட்டு வீரரை வாங்க அணி திட்டமிடலாம்.

லிசாட் வில்லியம்ஸ் (Lizaad Williams)

தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரான லிசாட் வில்லியம்ஸ், ஒரு மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், கடந்த சீசன் முழுவதும் வலை பயிற்சியில் பந்து வீசியதைத் தவிர, ஒரு போட்டியில் கூட களமிறக்கப்படவில்லை. இவரை விடுவிப்பதன் மூலம், ஒரு வெளிநாட்டு வீரருக்கான இடத்தை காலி செய்து, ஏலத்தில் ஒரு பயனுள்ள வீரரை வாங்க முடியும் என அணி நிர்வாகம் கருதுகிறது. இந்த வீரர்களை விடுவிப்பதன் மூலம் கிடைக்கும் பெரிய தொகையைக் கொண்டு, ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் புதிய மற்றும் திறமையான வீரர்களை வாங்கி, மீண்டும் ஒருமுறை கோப்பையை வெல்லும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் அணி தீவிரம் காட்டி வருகிறது.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.