புதுடெல்லி,
ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம்) அமைப்பின் 47-வது உச்சி மாநாடு வருகிற 26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறுகிறது. இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய 10 நாடுகளை உள்ளடக்கிய ஆசியான் அமைப்புக்கும் இந்தியாவுக்கும் சமீபத்திய ஆண்டுகளாக இரு தரப்பு உறவு முன்னேற்றம் அடைந்து வருகிறது.
பிரதமர் மோடிக்கு ஆசியான் மாநாட்டில் பங்கேற்க மலேசியா அழைப்பு விடுத்தது. இதையடுத்து மோடி மலேசியாவுக்கு பயணம் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மலேசியாவில் நடைபெறும் ஆசியான் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி நேரில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
எனது அன்பு நண்பர் மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிமுடன் ஒரு அன்பான உரையாடல் நடந்தது. மலேசியாவின் ஆசியான் மாநாட்டு தலைமைக்காக அவரை வாழ்த்தினேன். நடைபெற உள்ள உச்சிமாநாடுகள் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தேன்.ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் மெய்நிகர் முறையில் பங்கேற்கவும், ஆசியான் -இந்தியா விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தவும் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.இதன்மூலம் ஆசியான் மாநாட்டில் மோடி நேரில் பங்கேற்காமல் காணொளி மூலம் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
இதுதொடர்பாக மலேசிய பிரதமர் அன்வர் கூறும் போது, “பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசினேன். ஆசியான் உச்சி மாநாட்டிற்கான தயாரிப்புகள் குறித்து இருவரும் விவாதித்தோம். அதே வேளையில் இந்தியாவில் தீபாவளி பண்டிகை இன்னும் கொண்டாடப்படுவதால் ஆன்லைனில் கலந்து கொள்வதாக மோடி தெரிவித்தார். அவரது இந்த முடிவை மதிக்கிறேன். மலேசியா- இந்தியா உறவை வலுப்படுத்துவதற்கும். ஆசியான் -இந்தியா உறவை மேலும் மேம்படுத்துவதற்கும் மலேசியா தொடர்ந்து உறுதி பூண்டுள்ளது என்றார்.
ஆசியான் உச்சி மாநாட்டில் மலேசியாவின் அழைப்பை ஏற்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கலந்து கொள்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியின் மலேசிய பயணம் ரத்து மூலம் டிரம்ப் வுடனான சந்திப்பு இந்த ஆண்டு நடைபெற வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி,
அக்டோபர் 26 ஆம் தேதி நடைபெறும் 22வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி மெய்நிகர் முறையில் கலந்து கொள்வார் என்றும் இந்தியா சார்பில் 27-ம் தேதி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்பார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.