பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தேஜஸ்வி யாதவ் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டினார். மேலும், பிரதமர் மோடி – நிதிஷை பிஹார் மக்கள் நம்புகின்றனர் எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய ரவிசங்கர் பிரசாத், “தேஜஸ்வி யாதவ் என்ன சொல்கிறார் என்று முதலில் அவருக்குப் புரிகிறதா?. அவரது தந்தைக்கு மாட்டு தீவன ஊழலின் நான்கு வழக்குகளில் 32.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளார்.
தேஜஸ்வி யாதவ் ஐபிசி பிரிவு 420-ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர். பிஹாரின் வளர்ச்சிக்கு யார் பங்களித்திருக்கிறார்கள் என்பது பிஹார் மக்களுக்கு நன்கு தெரியும். தேஜஸ்வி யாதவ் மீது பிஹார் மக்களுக்கு நம்பிக்கை இல்லை பிரதமர் மோடியும், நிதிஷ் குமாரும் பிஹாரை வளர்ப்பார்கள். பிஹார் இவர்களின் இரட்டை இன்ஜின் அரசாங்கத்தை விரும்புகிறது” என்றார்.
முன்னதாக, இன்று காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவை அறிவித்தார். அதனையொட்டி பேசிய அவர், “நாட்டின் நிலைமை குறித்து அனைவரும் கவலைப்பட வேண்டும். அதனால்தான் கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, இந்தத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் என்று நான் அறிவிக்கிறேன். அவர் ஒரு இளைஞர், அவருக்கு நீண்ட எதிர்காலம் உள்ளது, பொதுமக்கள் அவரை ஆதரிப்பார்கள்” என்று அசோக் கெலாட் கூறினார். இந்த நிகழ்வில் மகா கூட்டணியின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
பிஹார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், மகா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மகாகட்பந்தனில் காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் முகேஷ் சஹானியின் விகாஷீல் இன்சான் கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.