நாலணாவுக்கு சினிமா, டூரிஸ் டாக்கீஸில் ஆடு நுழைந்த கதை!- ஜில் அனுபவம் #DiwaliCinema

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

நாலணாவுக்கும் நான்கு ரூபாய்க்கு இடையே உள்ள வித்தியாசம் தான் எங்களை தீபாவளி படம் பார்க்க வைத்தது.

ஆம் .. 1970 களின் பின்பாதியில் .. அப்போதைய ஒன்றிணைந்த வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு ஓரமாக பசுமை போற்றிக் கிடக்கும் அழகிய பூங்குளம் கிராமத்தில் சினிமா கொட்டகைகள் இல்லாத கால கட்டம் .. (இன்றைக்கும் இல்லை என்பது வேறு விஷயம் ).

சினிமா பார்க்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் எட்டு கிலோமீட்டர் தூரம் நடந்தால் மிட்டூர் அல்லது 10 கிலோமீட்டர் நடந்தால் ஆலங்காயம் போயாக வேண்டும். குடும்பமாக செல்பவர்கள் சில சமயங்களில் மாட்டு வண்டியில் செல்வார்கள் .

டூரிங் டாக்கீஸ் என்பதால் இரவு காட்சிகள் மட்டும் தான் வழக்கமாக நடைபெறும். பொங்கல் , தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் பகல் காட்சி நடைபெறும்போது சுற்றுவட்டார கிராமங்களுக்கு மாட்டு வண்டியில் ஸ்பீக்கர் கட்டிக்கொண்டு வந்து ஊர் ஊராக விளம்பரம் படுத்துவார்கள். அந்த பண்டிகை கால பகல் காட்சியை பார்ப்பதற்கு வீட்டில் பதினெட்டு பல்டி அடிக்க வேண்டும்.தீபாவளி படங்கள் என்றால் புத்தம் புதுசா ரிலீஸ் செய்வார்கள் என்று யாரும் எண்ண வேண்டாம். கிட்டத்தட்ட வெளியாகி ஒரு வருடம் ஆகியுள்ள திரைப்படங்கள் தான் எங்களுக்கு தீபாவளி திரைப்படங்கள்.

அப்படித்தான் ஒரு முறை தீபாவளியை முன்னிட்டு அருகில் உள்ள டூரிங் டாக்கீஸில் “ஆட்டுக்கார அலமேலு” படம் திரையிடப்படுவதாக ஊரில் அறிவித்துக் கொண்டு வந்தார்கள்.

மாட்டுவண்டி வைத்திருந்த உறவுக்கார குடும்பம் வண்டியில் சினிமா பார்க்க கிளம்புவதாக அறிந்து , நானும் சென்று வரலாம் என்று வீட்டில் கேட்டேன். சின்னப்பையன் உன்னையெல்லாம் தனியாக அனுப்ப முடியாது என்று சொல்லி விட்டார்கள் .

ஒண்ணு படத்துக்கு அனுப்புங்க இல்லன்னா பட்டாசு வாங்கி கொடுங்க .. என்று நான் அடம் பிடிக்கவும் , சினிமான்னா நாலணா கொடுத்தா போதும் .. பட்டாசு என்றால் குறைந்தது மூன்று அல்லது நான்கு ரூபாவாவது (அப்போதைக்கு அதுவே பெரும் தொகை ) ஆகும் என்று கணக்கு பார்த்து நாலணா கொடுத்து கூடவே இரண்டு முறுக்கு களையும் டவுசர் பாக்கெட்டில் திணித்து அனுப்பிவைத்தார்கள்.

சந்தோஷமாக மாட்டு வண்டியில் பின்னாடி அமர்ந்து காலை தொங்க போட்டு கொண்டு போனது இன்னைக்கும் நினைத்தால் குஷியா இருக்கிறது.

தரை டிக்கெட் ,பெஞ்ச், பேக் பெஞ்ச், சேர் என்று வகை பிரிக்கப்பட்டிருக்கும் அந்த டூரிங் டாக்கீஸில் எனக்கு 20 காசு கொடுத்து த(அ)ரை டிக்கெட் வாங்கி கொடுத்தார்கள் . தரை டிக்கெட் என்றால் மணல் கொட்டி வைத்திருப்பார்கள்.. விருப்பப்பட்ட இடத்தில் அமர்ந்து கொள்ளலாம். சிறப்பு பகல் காட்சி என்பதால் பக்கவாட்டில் திரைகளை கட்டி படத்தை ஓட்டுவார்கள் .

குள்ளமாக இருப்பவர்கள் எல்லோரும் மணலை கோபுரம் மாதிரி குவித்து அதன் மேல் ஏறி அமர்ந்து கொண்டு படத்தை பார்ப்பார்கள்.பின்னாடி அமர்ந்திருக்கும் சில குறும்புக்கார இளவட்டங்களும் பெரியவர்களும் மணல் கோபுரத்தை லேசாக சுரண்டி சுரண்டி மணலை கீழே இறக்கி நம்மை சாயவைத்து சந்தோஷப்படுவார்கள் .

இப்படியாக படத்தை ரசித்து கொண்டு இருக்கும் போது , படத்தில் வந்த ஆடு சத்தத்தை வைத்தோ என்னோவோ , பக்கத்தில் வயற்காட்டில் மேய்ந்து கொண்டிருந்த நிஜ ஆடு ஒன்று உள்ளே ஓடி வந்து விட்டது . ஏய் .. ஊய் .. என்று சினிமா கொட்டகை களேபரம் ஆகிவிட்டது.

பெரும்பாலோனோர் இடைவேளையில் , ஒரு பைசா , இரண்டு பைசாவுக்கு போண்டா முறுக்கு வாங்கி சாப்பிட , நான் மட்டும்  டவுசரில்   இருந்த முறுக்கை கடிக்க ஆரம்பித்தேன் .

கலர் கூல் ட்ரிங்க்ஸ் குடிக்க வேண்டும் என்று ஆசை .. கையில் காசு இல்லையே என்ன பண்ணுவது என்று என்னை நானே சமாதானம் பண்ணிக் கொண்டு மீதி படத்தை பார்த்துவிட்டு மாட்டு வண்டியில் மீண்டும் ஊர் வந்து சேர்ந்தேன்.

அதன் பிறகு சுமார் 50 தீபாவளி கடந்து போனாலும் .. அந்த மாட்டு வண்டி பயணம் .. ஆட்டுக்கார அலமேலு படம்.. நிஜ ஆடு என்ட்ரி என்று அந்த தீபாவளியில் படம் பார்த்த அனுபவத்தை மறக்கவே முடியாது

-அதிஷ்யன் மேதாவி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.