பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் திரைக்கு வந்திருக்கும் டியூட்’ திரைப்படம் திரையரங்குகளில் பாராட்டுகளையும், வசூலையும் அள்ளி வருகிறது.
அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் ஆணவக் கொலைக்கு எதிராக இந்த ராம் – காம் ஜானர் படத்தில் அழுத்தமாக பேசியிருக்கிறார்.
`டியூட்’ படத்தின் ரிலீஸுக்குப் பிறகு சினிமா விகடன் சேனலுக்காக இயக்குநர் கீர்த்தீஸ்வரனை சந்தித்துப் பேட்டிக் கண்டோம்.

நம்மிடையே அவர் பகிர்ந்த சில சுவாரஸ்யமான விஷயங்களை இங்கே பார்க்கலாம்.
* டியூட்’ படத்தின் கதையை எழுதும்போது முதலில் படத்திற்கு சலோமியா’ என்றுதான் தலைப்பிட்டிருந்தேன். நண்பர்கள் குறித்தான கதை என்பதால் அந்தத் தலைப்பை யோசித்திருந்தேன். அதை வொர்கிங் டைட்டிலாகதான் வைத்திருந்தேன். ஆனால், `டியூட்’ என்கிற தலைப்பு அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருந்தது.
* படத்தின் முதல் காட்சியில், பிரதீப் ரங்கநாதன் கல்யாண மண்டபத்தில் ஓடிக் கொண்டிருப்பார். அவருடைய டைட்டில் கார்ட் இன்ட்ரோ காட்சி தொடங்கி அந்த சீக்வென்ஸ் முழுவதையும் எடுப்பது மிகக் கடினமான விஷயம். அக்காட்சியில், டூப் இல்லாமல் பிரதீப் ரங்கநாதனை வைத்து எடுத்தது எனக்கு சுலபமாக இருந்தது. `நாம் என்ன சொன்னாலும் அதை இவர் செய்கிறாரே’ என்கிற எண்ணம்தான் எனக்கு இருந்தது. ஜாக்கி சானின் சண்டைகளில் இருக்கும் விஷயங்களை வைத்து அந்தக் காட்சியை எடுக்க முடிவு செய்து எழுதினேன். பிரதீப் இருந்ததனால் நான் நினைத்ததை என்னால் எடுக்க முடிந்தது.

* அதியமான் அழகப்பன் கதாபாத்திரத்திற்கு முதலில் சரத்குமார் சாரை நாங்கள் யோசிக்கவில்லை. இந்தத் திரைப்படம் எப்படியான படமாக உருவாகும், அந்தக் கதாபாத்திரத்திற்கு யார் நடிக்கப்போகிறார் என்பது போன்ற விஷயங்களை யோசிக்காமல்தான் நாங்கள் வேலை செய்து வந்தோம். ஆனால், சரத்குமார் சார் படத்திற்குள் வந்து அந்தக் கதாபாத்திரத்தை வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.
* இப்போது சினிமாவில் பழைய பாடல்களை பயன்படுத்துகிறோம். சரத்குமார் சார் என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது சூர்யவம்சம் படத்தில் வரும் சலக்கு சலக்கு’ பாடல்தான். ஆனால், இன்னும் வேறு எதாவது யோசிப்போம் என நினைத்து யோசித்தபோதுதான் எனக்கு ஏய்’ படத்தில் வரும் `மயிலாப்பூரு மயிலே’ பாடலை படத்தில் பயன்படுத்தினோம். அந்தப் பாடலைத் திரும்பக் கேட்கும்போதுதான் சிறுவயதில் அதிகளவில் வைப் செய்திருக்கிறேன் என்பதை நான் உணர்ந்தேன்.

* ஒரு பாடலில் சென்னையைக் காட்சிப்படுத்திய விதத்தில் எனக்கு ஊர்வசி ஊர்வசி’ பாடலும், அயன்’ படத்தில் வரும் பளபளக்குற பகலா நீ’ பாடலும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்தப் பாடலைதான் ஊறும் ப்ளட்’ பாடலுக்கு ரெஃபரன்ஸாக இரண்டு வருடத்திற்கு முன்பே எடுத்து வைத்துவிட்டோம். அதுபோல, சென்னையைக் காட்ட வேண்டும் என்கிற ஆசை இருந்தது. அதே சமயம் அந்தப் பாடல் போல அப்படியே செய்ய வேண்டாம் எனவும் முடிவு செய்துவிட்டோம். எடிட் ரிதம், ஆர்ட் வொர்க் என அனைத்திலும் புதுமையைக் கொண்டு வர நினைத்து அந்தப் பாடலை எடுத்தோம்.
* `டியூட்’ திரைப்படம் ஆணவக் கொலைகளுக்கு எதிரான திரைப்படம். அதனை என்டர்டெயின் செய்யும் திரைப்படத்தின் வழியாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென நினைத்தேன். படத்தின் க்ளைமேக்ஸில் `உங்க ஆணவத்துக்கு கொலை பண்ணுவீங்களா டா’ எனவொரு வசனம் இருக்கும். அதை கதை எழுதும்போது யோசிக்கவில்லை. நெல்லையில் கவினுக்கு நிகழ்ந்த விஷயம்தான், ஆணவக் கொலைகள் தொடர்பாக இன்னும் வலுவாக சொல்ல வேண்டும் என எனக்குத் தோன்றியது.