Bison: “பல காட்சிகளில் என்னைப் பொருத்திப் பார்த்தேன்" – மாரி செல்வராஜை பாராட்டிய அண்ணாமலை

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ், பசுபதி, அமீர், லால், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன், `அருவி’ மதன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான `பைசன் காளமாடன்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

திரைப்படம் வெளியான நாள்முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர்கள் சேரன், இரா.சரவணன், லிங்குசாமி உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலரும் பைசன் படத்தைப் பாராட்டி வருகின்றனர்.

மேலும், வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.

Bison Kaalamaadan - பைசன் காளமாடன்
Bison Kaalamaadan – பைசன் காளமாடன்

இந்த நிலையில், தமிழக மாநில பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை பைசன் படம் பற்றியும், படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவினரை பாராட்டியும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அண்ணாமலை, “அன்புச் சகோதரர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள, பைசன் – காளமாடன் திரைப்படத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்தது.

ஒரு அற்புதமான, உணர்வுபூர்வமான திரைப்படத்தைத் தந்திருக்கிறார். அவருக்கும், படக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு கிராமத்து இளைஞன், தனது லட்சியத்தை அடைய எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சந்திக்கும் சவால்கள், சமூகம் சார்ந்த சிக்கல்கள் என, அனைத்தையும் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார் மாரி செல்வராஜ்.

திரைப்படத்தின் பல காட்சிகளில், உணர்வுப் பூர்வமாக என்னைப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிந்தது.

அர்ஜுனா விருது வென்ற இந்தியக் கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மிக அற்புதமாகத் திரையில் தந்திருக்கிறார் மாரி செல்வராஜ். அவரது சாதனை அத்தனை எளிதாகக் கிடைத்துவிடவில்லை.

சாதிக்க விரும்பும் இளைஞனுக்கு, சமூகம் பல வழிகளில் வேலியிட்டாலும், அந்த வேலியின் உயரத்தைத் தாண்டி வளர வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டான நம் மண்ணைச் சேர்ந்த நாயகன் மணத்தி கணேசன் வரலாற்றை, மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

மேலும், சமூக ஒற்றுமை வேண்டும் என்ற தனது ஆழ்ந்த விருப்பத்தையும், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வெளிப்படுத்தியிருக்கிறார்.

கதாநாயகன் துருவ், இந்தத் திரைப்படத்துக்காக தன்னையே அர்ப்பணித்திருப்பதை உணர முடிகிறது.

அண்ணன் பசுபதி, லால் ஆகியோரின் நடிப்புத் திறனைக் குறித்து நான் புதியதாக எதுவும் சொல்லத் தேவையில்லை.

அனைத்து நடிகர்களுமே தங்கள் அற்புதமான திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள்.

பா.ரஞ்சித், மாரி செல்வராஜ்
பா.ரஞ்சித், மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ், மேலும் பலப்பல அற்புதமான திரைப்படங்களைத் தர வேண்டும். மக்களை ஒன்றிணைக்கவும், ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமையவும், சமூகம் சார்ந்த அவரது பயணம் சிறப்பாகத் தொடர வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்” என்று பதிவிட்டு பைசன் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குநர் பா. ரஞ்சித்தை டேக் (Tag) செய்திருந்தார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.