புதுடெல்லி: ஆசியான் உச்சி மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடியின் முடிவை மதிப்பதாக மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியா, மலேசியா, கம்போடியா, புருனெய், லாவோ பிடிஆர், மியான்மர், பிலிப்பின்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் அமைப்பின் 47-வது உச்சி மாநாடு மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் வரும் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த உச்சிமாநாட்டில் ஆசியான் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
இதில், கலந்து கொள்வதற்காக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு முக்கிய நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரண்டு நாள் பயணமாக மலேசியாவுக்கு செல்ல இருக்கிறார்.
இந்நிலையில், இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்து கொள்ள இருக்கிறார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “எனது அன்பு நண்பர் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் அன்பான உரையாடல் நடத்தினேன். ஆசியான் அமைப்புக்கு மலேசியா தலைமை வகிப்பதற்கு வாழ்த்து தெரிவித்தேன். மேலும், ஆசியான் உச்சி மாநாடு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தேன்.
ஆசியான் – இந்தியா உச்சி மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக இணைவதையும், ஆசியான் – இந்தியா இடையேயான விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தப்படுவதையும் எதிர்நோக்குகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக அன்வர் இப்ராஹிம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மலேசியா – இந்தியா இடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. தொழில்நுட்பம், கல்வி, பிராந்தியப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்பு உள்ளது. வர்த்தகம் மற்றம் முதலீட்டுத் துறைகளில் இந்தியா, மலேசியாவுக்கு முக்கிய பங்காளியாக உள்ளது.
இந்த மாத இறுதியில் கோலாலம்பூரில் நடைபெற உள்ள 47-வது ஆசியான் உச்சி மாநாட்டின் ஏற்பாடுகள் குறித்தும் நாங்கள் பேசினோம். அதேநேரத்தில், இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டங்களைக் கருத்தில் கொண்டு அவர் காணொலி காட்சி வாயிலாகக் கலந்து கொள்வதாக அறிவித்தார். அவரது இந்த முடிவை நான் மதிக்கிறேன். மேலும், அவருக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மலேசியா – இந்தியா இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கும், அமைதியான மற்றும் வளமான பிராந்தியத்தை நோக்கிய ஆசியான் – இந்தியா இடையேயான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கும் மலேசியா தொடர்ந்து உறுதிபூண்டிருக்கும்.” என தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் சந்திப்பை தவிர்ப்பதற்காக… ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடனான நேரடி சந்திப்பை தவிர்க்கும் பொருட்டே இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி நேரடியாக பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவுக்கு எதிராக கூடுதல் வரி விதிப்பு, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை எதிர்ப்பது உள்ளிட்ட அமெரிக்காவின் நடவடிக்கைகளே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது. இஸ்ரேல் – காசா இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்காக எகிப்தில் கடந்த வரம் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொள்வதற்கான அழைப்பையும் பிரதமர் மோடி ஏற்கவில்லை. அவருக்குப் பதிலாக வெளியுறவுத் துறை இணை அமைச்சர் அந்த மாநாட்டில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.