பத்தனம்திட்டா: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள 2 துவாரபாலகர் சிலைகள் மற்றும் அதன் பீடத்துக்கு தங்க முலாம் பூசும் பணி உன்னி கிருஷ்ணன் போற்றியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த பணிக்குப் பிறகு ஒப்படைக்கப்பட்ட சிலையில் 4 கிலோ தங்கம் மாயமானதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்தது.
இந்நிலையில், திருவாங்கூர் தேவசம் போர்டு (டிடிபி) முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபுவை எஸ்ஐடி அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். இதையடுத்து, பத்தனம்திட்டா நீதிமன்றத்தில் நேற்று அவர் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.