டெல்டாவில் பாதித்த குறுவை நெற்பயிர்கள் குறித்து விரைந்து கணக்கெடுப்பு: அமைச்சர் தகவல்

திருவாரூர்: டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும், நிவாரணம் குறித்து முதல்வர் அறிவிப்பார் என்றும் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

நாகை மாவட்டத்தில் கருவேலங்கடை, கீழ்வேளுர் வட்டம் சின்னதும்பூர், திருக்குவளை வட்டம் திருவாய்மூர், திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் ஆகிய கிராமங்களில் மழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்களை வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் இன்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “காவிரி டெல்டாவில் கடந்த ஆண்டை விட நிகழாண்டு குறுவை சாகுபடி பரப்பு 3 மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு, ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்துவிட்டது மட்டுமின்றி, டெல்டாவுக்கு மட்டும் ரூ.132 கோடி நிதி ஒதுக்கீடு செய்து குறுவைத் தொகுப்பு வழங்கியது, வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் போன்றவை காரணம் ஆகும்.

10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் விவசாயிகளின் நெல்லுக்கு ரூ.1,145 கோடி ஊக்கத் தொகை மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், கடந்த நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் ரூ.1,959 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 7.27 லட்சம் டன் சேமிக்கும் அளவுக்கு நெல் சேமிப்பு கிடங்குகள் மட்டுமே கட்டப்பட்டன. கடந்த நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் 4.32 லட்சம் டன் நெல் மூட்டைகள் பாதுகாக்கும் அளவிலான கிடங்குகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. மேலும் 3 லட்சம் டன் நெல்லை பாதுகாக்கும் அளவுக்கு கிடங்குகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வர உள்ளன.

மழை தொடங்கிய நிலையில், தீபாவளி பண்டிகையும் வந்துவிட்டதால், தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக நெல் மூட்டைகளை இயக்கம் செய்வதில் சற்று சறுக்கல் ஏற்பட்டது. அந்த நிலைமை தற்போது சீரடைந்துவிட்டது. தற்போது நடைபெற்ற ஆய்வில் அறுவடைக்கு தயாராக இருந்த 2,550 ஹெக்டேர் குறுவை நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. 25,610 ஹெக்டேர் குறுவை பயிர்களை மழை நீர் சூழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

சம்பா நெற்பயிர்களை பொறுத்தவரை மழைநீர் வடிந்தவுடன் பயிர்கள் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து விரைவாக கணக்கெடுப்பு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கணக்கெடுப்புக்கு பின்னர் உரிய நிவாரணத்தை முதல்வர் அறிவிப்பார். செறிவூட்டப்பட்ட அரிசி விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை அனுமதி அளிக்கவில்லை. முதல்வராக பதவி வகித்தவர் (பழனிசாமி) அரசியல் காரணங்களுக்காக உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்து வருகிறார்” என்று அவர் கூறினார்.

தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்தில் ரிஷியூர், நார்த்தங்குடி, கொட்டையூர் உள்ளிட்ட பகுதிகளிலும், தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே கீழக்கோவில்பத்து கிராமத்திலும் மழையால் பாதிக்கப்பட்ட குறுவை சாகுபடி வயல்களை அமைச்சர் பார்வையிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.