விருதுநகர்: 16 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜான்போஸ்கோ பிரகாஷ் விருதுநகரில் இன்று அளித்த பேட்டியில், “எங்களது கூட்டமைப்பு சார்பில் மிகப் பெரிய போரட்ட களங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நோக்கி நாங்கள் செல்வோம். எங்களுக்கு எந்த அரசியல் கட்சி பின்புலமும் இல்லை. நாங்கள் 1 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். அனைத்துப் பணியாளர்களும் களத்தில் இருப்போம்.
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்து துறை அனைத்து சங்கங்களின் சார்பில் 16 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து திருச்சியில் பெரும் மாநாட்டை நடத்தினோம். அதில் 3 கட்ட போராட்டங்களை நடத்த முடிவு செய்தோம். அதன்படி கடந்த 24-ம் தேதி மாவட்ட அளவில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 2-ம் கட்டமாக 29-ம் தேதி மாநில அளவில் ஒரு லட்சம் பேர் தற்செயல் விடுப்பு எடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
தூய்மைப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். மக்கள் நலப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மேல்நிலை குடிநீர் தொட்டி இயக்குவோருக்கு மாதம் ரூ.15 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு மதிப்பூதியம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும். கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
மாதம் ரூ.20 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 16 கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டம் நடத்துகிறோம். கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் 3-ம் கட்டமாக நவம்பர் 24-ம் தேதி தமிழகம் முழுவதும் தொடர் காலவரையற்ற போராட்டம் நடத்துவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்” என்றார்.