சென்னை: நாய்கள் விரட்டி கடித்ததில் கீழே விழுந்த மூதாட்டியின் இடுப்பு எலும்பு முறிந்தது. கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சவுந்தர்யா (70). இவர் அதே பகுதியில் நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 4 நாய்களில் ஒன்று மூதாட்டி சவுந்தர்யா மீது திடீரென பாய்ந்தது.
இதையடுத்து, மற்ற 3 நாய்களும் மூதாட்டியை கடிக்க விரட்டின அப்போது பயந்து போன மூதாட்டி, நாய்களிடமிருந்து தப்பிக்க ஓடினார். அப்போது, அவர் எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவரை நாய்கள் சூழ்ந்து கொண்டு கடித்து குதறியது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் நாயை விரட்டி மூதாட்டியை காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் சோதித்து பார்த்தபோது மூதாட்டி சவுந்தர்யாவின் இடுப்பு எலும்பு முறிந்திருந்தது தெரிந்தது. இந்த தொடர்பாக கோட்டூர்புரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.