பாட்னா: நிதிஷ் குமாரை பாஜக கடத்திச் சென்றுவிட்டது என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் அவரை பிஹாரின் முதல்வராக்க மாட்டார்கள் என்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.
சஹர்சா மாவட்டத்தில் நடந்த பேரணியில் பேசிய தேஜஸ்வி யாதவ், “தேர்தலுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களே பிஹார் முதல்வரை முடிவு செய்வார்கள் என்று அமித் ஷா தெளிவுபடுத்தியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் நிதிஷ் குமாரை முதல்வராக்க மாட்டார்கள். அந்தக் கூட்டணி இப்போது நிதிஷ் குமாரின் கட்டுப்பாட்டில் இல்லை. நிதிஷ்குமார் பிஹாருக்கு வெளியில் இருந்து செயல்படும் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவால் கடத்தப்பட்டுள்ளார். வரவிருக்கும் இந்தத் தேர்தலில் வெளியாட்களுக்கு வாக்களிக்காமல், ஒரு பிஹாரிக்கு வாக்களிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் அவர் கூறுகையில், “ஒரு பிஹாரியாக, பிஹாரின் மோசமான நிலையைக் கண்டு நான் வேதனைப்படுகிறேன். மாநிலத்தில் அதிகரிக்கும் வேலையின்மை, ஊழல் போன்றவற்றைக் காணும்போது அது எனக்கு வேதனையைத் தருகிறது. பிஹாரில் 20 ஆண்டுகள் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி செய்தும், 11 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் இருந்தும், மாநிலத்தின் தனிநபர் வருமானம் மிகக் குறைவாக உள்ளது. விவசாயிகள் ஏழைகளாகவே உள்ளனர், பிஹார் இன்னும் ஏழை மாநிலமாகவே உள்ளது.
லாலு பிரசாத் யாதவ் மோடிக்கு அஞ்சவில்லை. அவரது மகனும் பயப்பட மாட்டார். 20 ஆண்டுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செய்யத் தவறியதை, 20 மாதங்களில் நான் செய்வேன். ஊழல் மற்றும் குற்றம் இல்லாத, வளர்ச்சிக்கான முதலீட்டை ஈர்க்கும் பிஹாரை மக்கள் விரும்புகிறார்கள்.
எங்கள் கூட்டணிக்கு வாக்களித்தால் எல்பிஜி சிலிண்டர்களின் விலையை ரூ.1,000 லிருந்து ரூ.500 ஆகக் குறைப்போம். முதியோர் ஓய்வூதியத்தை ரூ.1,100 லிருந்து ரூ.1,500 ஆக உயர்த்துவோம். மாநிலத்தில் வேலைவாய்ப்பு வழங்குவதில் உலக சாதனை படைப்பேன்” என்று தேஜஸ்வி யாதவ் கூறினார்.