சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஓடிஐ போட்டியை இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. ரோஹித் சர்மா சதத்தையும் கோலி அரைசதத்தையும் அடித்து போட்டியை வென்று கொடுத்திருந்தனர். இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு இருவரும் கூட்டாக பேட்டி அளித்திருந்தனர்.

அதில் ரோஹித் பேசுகையில், ‘ஆஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் ஆட வருவது எப்போதுமே பிடிக்கும். குறிப்பாக இந்த சிட்னி மைதானம் பல பழைய நினைவுகளை கிளறிவிட்டது. 2008 லேயே இங்கே ஆடியிருக்கிறேன். நாங்கள் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு வருவோமா என தெரியாது. ஆனால், இங்கு ஆடிய ஒவ்வொரு தருணத்திலும் மகிழ்ந்திருக்கிறேன்.
எது நடந்தாலும் கடந்த 15 ஆண்டுகளில் கிரிக்கெட் ஆடுவதை மட்டுமே விரும்பியிருக்கிறோம். ஆஸ்திரேலியாவில் ஆடுவதை எப்போதும் விரும்பியிருக்கிறேன். தேங்க்யூ ஆஸ்திரேலியா!’ என்றார்.

கோலி பேசுகையில், ‘நீங்கள் எவ்வளவு காலம் கிரிக்கெட் ஆடியிருந்தாலும், இந்த ஆட்டம் உங்களுக்கு பல புதிய வழிகளை காட்டிக் கொண்டேதான் இருக்கும். இன்னும் சில நாட்களில் எனக்கு 37 வயதாகிவிடும். சேஸிங்தான் எப்போதுமே எனக்குள் இருக்கும் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொணர்கிறது என நினைக்கிறேன்.

ரோஹித்துடன் மேட்ச் வின்னிங் பார்ட்னர்ஷிப்பை அமைத்ததில் மகிழ்ச்சி. இப்போதைக்கு நாங்கள்தான் ரொம்பவே அனுபவமிக்க இணை என நினைக்கிறேன். நாங்கள் இளைஞர்களாக இருந்த போதே ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் போட்டியை வென்று கொடுக்கும் என்பதை உணர்ந்திருந்தோம்.
2013 இல் ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு வந்திருந்தார்கள். அந்தத் தொடரிலிருந்தே எங்கள் இருவருக்கும் அந்த புரிதல் உண்டானதென நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவுக்கு வருவது எப்போதுமே பிடிக்கும். இங்கே சிறப்பான ஆட்டங்களை ஆடியிருக்கிறோம். எப்போதுமே எங்களுக்கு ஆதரவளிக்க பெருந்திரளாக திரண்டு வருவார்கள். அதற்கு நன்றி.’ என்றார்.