'உயர்கல்வியை வணிகமயமாக்கும் மசோதாவை திரும்பப் பெறவேண்டும்' – தமிழ்நாடு அரசுக்கு திருமா அறிக்கை

தமிழ்நாடு அரசின் ‘தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதா’வை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்…

“உயர்கல்வியை முற்றிலும் வணிகமயமாக்குவதற்கு வழிவகுக்கும் ‘தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதாவை’த் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வலியுறுத்துகிறோம்.

பல்கலைக்கழகம்
பல்கலைக்கழகம்

நடந்து முடிந்த சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இயங்கி வரும் தனியார் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளின் நிர்வாகங்கள் விரும்பினால் அவற்றைத் தனியார்ப் பல்கலைக்கழகங்களாக மாற்றிக் கொள்ள இந்த சட்டத் திருத்தம் வழி வகுக்கிறது.

தனியார் பல்கலைக்கழகம் துவக்குவதற்கு குறைந்தபட்சம் 100 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் என்ற விதி முன்பு இருந்தது. அதை தளர்த்தி மாநகராட்சிப் பகுதிகளில் 25 ஏக்கர்; நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 35 ஏக்கர்; இதர பகுதிகளில் 50 ஏக்கர் இருந்தாலே பல்கலைக்கழகம் ஆரம்பிக்கலாம் என்று இந்த திருத்தச் சட்டத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் விரும்பினால் அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து புதிய பல்கலைக்கழகங்களாக செயல்படலாம் என்ற அனுமதியும் இதில் வழங்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமலேயே தனியார் கல்லூரிகளோ அரசு உதவி பெறும் கல்லூரிகளோ தம்மைப் பல்கலைக்கழகங்களாக மாற்றிக் கொள்ள முடியும். புதிதாக உருவாகும் தனியார் பல்கலைக்கழகங்கள் பாடத்திட்டங்களிலிருந்து, மாணவர் படிப்புக் கட்டணம், ஆசிரியர் ஊதியம் எல்லாவற்றையும் தமது விருப்பம் போல் நிர்ணயித்துக் கொள்ள முடியும்.

மாணவர்கள்
மாணவர்கள்

உயர் கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தில் ( GER) இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது என்பது பெருமைப்படத்தக்கதுதான். ஆனால் அது இன்னொரு விதத்தில் கல்வி தனியார் மயமாவதற்கும் வழி வகுத்துள்ளது.

ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள 2020- 2021 ஆம் ஆண்டுக்கான உயர் கல்வி குறித்த அனைத்து இந்திய சர்வே அறிக்கை ( AISHE Report ) தமிழ்நாட்டில் மொத்தம் 2020 தனியார் கல்லூரிகளும், 265 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 372 அரசுக் கல்லூரிகளும் உள்ளன எனத் தெரிவிக்கிறது.

ஒட்டுமொத்தமாக இருக்கும் கல்லூரிகளில் சுமார் 16 % மட்டுமே அரசுக் கல்லூரிகள் ஆகும். சிறிய மாநிலமான கேரளாவில் 272 அரசுக் கல்லூரிகள் இருக்கின்றன. ஏறத்தாழ தமிழ்நாடு அளவே மக்கள் தொகை கொண்ட கர்நாடகாவில் 685 அரசுக் கல்லூரிகள் உள்ளன. மகாராஷ்டிராவில் 534 அரசு கல்லூரிகளும், மத்திய பிரதேசத்தில் 745 அரசுக் கல்லூரிகளும் இருக்கின்றன. இந்த மாநிலங்களையெல்லாம் ஒப்பிட்டால் தமிழ்நாட்டில் இருக்கும் அரசுக் கல்லூரிகளுடைய எண்ணிக்கை மிக மிகக் குறைவாகும். மாணவர்கள் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டாலும் தனியார் கல்லூரிகளில் சுமார் 13 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள்; அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 4.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள்; அரசுக் கல்லூரிகளில் 4.65 லட்சம் மாணவர்கள் மட்டுமே படிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மொத்தம் 61 பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன அவற்றில் இரண்டு மத்திய பல்கலைக்கழகங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பவை 22 பல்கலைக்கழகங்கள். தமிழ்நாட்டில் இருக்கும் பல்கலைக் கழகங்களில் பாதிக்கும் மேற்பட்டவை தனியார் பல்கலைக்கழகங்கள் ஆகும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு 26 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான்.

இந்தப் புள்ளி விவரங்கள் ஏற்கனவே உயர்கல்வி என்பது பணம் உள்ளவர்கள் மட்டுமே வாங்கும் பண்டம் ஆகிவிட்டது என்பதையே காட்டுகிறது. இந்நிலையில் இந்த சட்டத் திருத்தம் தமிழ்நாட்டில் உயர்கல்வி வணிகத்தை மிக வேகமாக அதிகரிக்கச் செய்யும். அது தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.

உயர்கல்வி தனியார் மயம் ஆவதால் மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு பறிபோகும்; கல்விக் கட்டணம் அதிகரிக்கும்; அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும், பணியாற்றும் ஆசிரியர்களும் ஒருசேரப் பாதிக்கப்படுவார்கள். எனவே, மாணவர்களின் நலன் கருதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.