சென்னை: எலும்பு அடர்த்தி குறைவதால் ஏற்படும் பலவீனம் (ஆஸ்டியோபோரோசிஸ்), இரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படும் பக்கவாதம், உடல் பருமனால் ஏற்படும் நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஓட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: “தமிழ்நாடு இந்தியாவிலேயே மருத்துவ விழிப்புணர்வு பெற்ற மாநிலமாக திகழ்கின்றது. கருணாநிதி தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழ்நாட்டினை உருவாக்கினார்.
தமிழ்நாட்டில் பொதுமக்கள் தாங்கள் பாடுபட்டு சேர்த்த செல்வங்களை எதிர்பாராத மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கான செலவுகளால் இழந்து விடாமல் காப்பதற்காக கருணாநிதி, இந்தியாவிற்கே முன்னோடியாக கலைஞர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தினார்.
இத்திட்டம் தற்போது முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டமாக லட்சக் கணக்கான பொது மக்களின் உயிர்களை காப்பாற்றி வருவதுடன், அவர்களின் குடும்பத்தினர் சேர்த்த செல்வத்தையும் பாதுகாத்துள்ளது. அவரது வழியில் ஏழை, எளிய மக்களின் நலன் காக்கும் முதல்வர் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவ சேவையை அளிக்கும் ”மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம், ”நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம்கள் ஆகியவற்றை செயல்படுத்தி வருகின்றார்.
மேலும் தமிழ்நாட்டில் ஏற்படும் சாலை விபத்துகளினால் உயரிழப்புகள் ஏற்படாமல் பாதுகாக்க, விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 48 மணி நேரத்திற்கு உயர் சிகிச்சைக்கான செலவினை அரசே ஏற்றுக் கொண்டு சிகிச்சை அளிக்கும் ”இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48” என்ற இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லாத திட்டத்தை செயல்படுத்தி வருகின்றார். இதன் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் பல்லாயிரக் கணக்கான நபர்கள் உயிர்காக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் பொதுமக்கள் உடற்பயிற்சி செய்வதற்காக கடந்த 4 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி கூடங்கள், சிறப்பு நடைபாதைகள், இயற்கை சூழலில் உடற்பயிற்சி மேற்கொள்ள பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டு, பொதுமக்கள் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பெற்று வருகின்றார்கள்.
அந்த வகையில் இந்திய மருத்துவ சங்கத்தின் சென்னை கோடம்பாக்கம் கிளை சார்பில் சென்னை நேப்பியர் பாலம் அருகே நடைபெற்ற எலும்பு அடர்த்தி குறைவதால் ஏற்படும் எலும்பு பலவீனம் (ஆஸ்டியோபோரோசிஸ்), இரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படும் பக்கவாதம், உடல் பருமனால் ஏற்படும் நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஓட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (அக்.26) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ சங்கத்தின் சென்னை கோடம்பாக்கம் கிளையின் தலைவர் எஸ்.எஸ்.கே. சந்தீப், செயலாளர் பிரியா கண்ணன், மீனாட்சி சுந்தரம் உள்பட மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.