சென்னை: தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறும் தமிழக அரசின் முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, கட்சியின் மாநி லச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கை: அண்மையில் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில், தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனால் ஏற்படும் எதிர்விளைவுகள், அரசின் சமூகநீதிக் கொள்கைக்கு எதிராக அமையும் என்பதையும்,அடித்தட்டு உழைக்கும் மக்களின் கல்வி பெறும் உரிமையை மறுக்கும் என்பதை அரசின் கவனத்துக்கு எடுத்துக் கூறப்பட்டது.
கல்வியாளர்கள், மாணவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் பல்கலைக்கழகங்கள் சட்டத் திருந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வந்த நிலையில், அதன் நியாயத்தை உணர்ந்து,தமிழக அரசு மசோதாவை திரும்பப் பெற்று, மறுபரி சீலனை செய்வது என முடிவு எடுத்துள்ளது. பேரவையில் நிறைவேற்றிய மசோதா மீது மக்கள் மன்றத்திலிருந்து வந்த விமர்சனக் கருத்துக்களுக்கு மதிப்பளித்து,சட்ட மசோதாவை திரும்பப் பெறும் அரசின் முடிவை இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்கிறது இவ்வாறு தெரிவித்துள்ளார்.