புதுடெல்லி: பிஹாரில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. பிரச்சாரத்துக்கு அனைத்து கட்சி தலைவர்களும் 15 ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுத்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 2020 தேர்தலில் பயன்படுத்தியதைவிட ஒன்றரை மடங்கு அதிகமாகும்.
ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையிலான எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியில் 4 ஹெலிகாப்டர்களும் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு)2, பாஜக 9 என மொத்தம் 11 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், பாட்னா விமான நிலையம் பரபரப்பாக காணப்படுகிறது. முதல்வர் நிதிஷ்குமார், மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் தனித்தனி ஹெலிகாப்டர்களை பயன்படுத்துகின்றனர்.
காங்கிரஸின் 4 இருக்கைகள் கொண்ட 2 ஹெலிகாப்டர்களில் ஒன்று தனியாக பூர்ணியா எம்.பி. பப்பு யாதவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்றொன்றை காங்கிரஸின் ராகுல் உள்ளிட்ட நட்சத்திர பிரச்சாரகர்கள் பயன்படுத்துகிறார்கள். ஹெலிகாப்டரை முன்பதிவு செய்வதற்கு 3 மணி நேரத்துக்கு ஜிஎஸ்டி.யுடன் சேர்த்து கட்டணம் சுமார் ரூ.10 லட்சத்து 6,200 செலவாகும். முன்பதிவு செய்த ஹெலிகாப்டரை பிரச்சாரத்துக்கு பயன்படுத்தாவிட்டாலும் கட்டணம் செலுத்த வேண்டும். இந்நிலையில், பிஹாரில் வளர்ச்சி அடையாத கிராமங்களில் ஹெலிகாப்டர்களை காண கூட்டம் கூடுகிறது.
இந்த கூட்டம் அரசியல் தலைவர்கள் பிரச்சாரம் முடியும் வரைக் காத்திருக்கிறது. பிரச்சாரம் முடிந்து கட்சி பிரமுகர்கள் திரும்பச் செல்லும் போதும் ஹெலிகாப்டர் பறப்பதை வேடிக்கை பார்க்கின்றனர்.