புதுடெல்லி: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பின்பற்றிய பாணியை பாஜக பிஹாரில் அமலாக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இது, மத்தியில் அக்கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) வெற்றிக்கு வழி வகுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மகாராஷ்டிராவில், இரண்டாகப் பிரிந்த சிவசேனாவில் ஏக்நாத் ஷிண்டேவின் பிரிவு பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. இதன் முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவை அமர அனுமதித்தது பாஜக. இரண்டு ஆண்டுகள் மற்றும் ஐந்து மாதங்களுக்கு முதல்வர் பதவியை வகித்தார் ஏக்நாத் ஷிண்டே.
இதையடுத்து, 2024-ல் நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது பாஜக கூட்டணி. வெற்றிக்கு பின் தனது போக்கை மாற்றிய பாஜக, தேவேந்திர பட்னாவிஸை முதல்வராக நியமித்தது.
தேர்தலை சந்திக்க முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட ஷிண்டே, துணை முதல்வராக பதவி இறக்கம் செய்யப்பட்டார். பிளவுபட்ட
மற்றொரு கட்சியும் தமது கூட்டணியின் தலைவருமான தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். இதே உத்தியை பாஜக பிஹாரிலும் பயன்படுத்தும் என்ற கருத்து எழுந்துள்ளது.
பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) தலைவரான முதல்வர் நிதிஷ் குமார், ஒரு வலுவான தலைவராக உள்ளார். ஆனால், வயது மூப்பின் காரணமாக நிதிஷ்குமார் உடல்நிலையில் முழுமையான நலம் இல்லை எனக் கருதப்படுகிறது.இருப்பினும், ஜேடியுவுக்கு சமமான தொகுதிகளைப் பிரித்து அளித்துள்ளது பாஜக(தலா 101 தொகுதிகள்). எனினும், ஜேடியுவின் வேட்பாளர்கள், பாஜகவை விட குறைந்த எண்ணிக்கையில் வெற்றி பெற்றால், மகாராஷ்டிரா உத்தியை பாஜக கையில் எடுக்கத் தயாராக உள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் பாஜகவின் பிஹார் தலைவர்கள் வட்டாரங்கள் கூறும்போது, ‘எங்களுக்கு அதிகமான எம்எல்ஏக்கள் கிடைத்தால், ஜேடியு தனது முதல்வர் பதவியை விட்டுத் தருவதை தவிர வேறு வழியில்லை’ எனத் தெரிவித்தனர்.